தொடர்வேலை நிறுத்தத்திற்கு பிறகு மீன்பிடிக்க சென்ற முதல் நாளிலேயே மீனவர்களை தாக்கி விரட்டியடிப்பு இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

தொடர் வேலை நிறுத்தத்திற்கு பிறகு மீன்பிடிக்க சென்ற முதல் நாளிலேயே ராமேசுவரம்

Update: 2017-03-19 22:30 GMT

ராமேசுவரம்,

வேலை நிறுத்தம்

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 6–ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ பலியானார். மற்றொரு மீனவர் சரோன் படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையினரை கைது செய்யக்கோரியும், தமிழக மீனவர்கள் தொல்லையில்லாமல் மீன்பிடிக்க வழிவகை செய்யும்படியும் கடந்த 7–ந்தேதி முதல் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பலியான மீனவரின் உடலை வாங்காமல் தங்கச்சிமடத்தில் மீனவர்களும், பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து கடந்த 13–ந்தேதி அறவழி போராட்டம் முடிவுக்கு வந்தது. அன்றைய தினமே ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த மீனவர் பிரிட்ஜோவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆனாலும் மீனவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

விரட்டியடிப்பு

அதன் பின்னர் ராமேசுவரத்தில் நடைபெற்ற மீனவர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (18–ந்தேதி) ராமேசுவரத்தில் இருந்து 500–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக குட்டி கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை கண்டதும் அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர்.

உடனே மீனவர்கள் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை எடுத்துக்கொண்டு வேகமாக கரைக்கு திரும்பினர். ஆனால் அதற்குள் ஒரு சில படகுகளை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அதில் இருந்த மீனவர்களை தாக்கி மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இனிமேல் மீனவர்கள் தாக்கப்படமாட்டார்கள் என்று மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ள நிலையில் தொடர் வேலைநிறுத்தத்திற்கு பிறகு மீன்பிடிக்க சென்ற முதல் நாளிலேயே மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ள சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் இடையே பதற்றத்தை உருவாக்கி உள்ளது. இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்