ஸ்ரீகாளஹஸ்தியில் சாலையில் தவறவிட்ட ரூ.1½ லட்சம் நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு கண்டெடுத்து போலீசில் கொடுத்த வாலிபரின் நேர்மைக்கு பாராட்டு

ஸ்ரீகாளஹஸ்தியில் சாலையில் தவறவிட்ட ரூ.1½ லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2017-03-19 22:45 GMT

ஸ்ரீகாளஹஸ்தி,

அடகு வைத்து மீட்ட நகைகள்

சித்தூர் மாவட்டம் தொட்டம்பேடு மண்டலம் கண்ணலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமிநாயுடு. இவர், ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் தனக்குச் சொந்தமான தங்கநகைகளை அடகு வைத்திருந்தார். அந்த நகைகளை, அவர் கடந்த 15–ந்தேதி மீட்டு, அதனை ஒரு பாலித்தீன் பையில் வைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறி, காய்கறி மார்க்கெட் வழியாக வீட்டுக்குப் புறப்பட்டார். வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, பாலித்தீன் பையோடு தங்கநகைகளை காணவில்லை. ஆட்டோவில் போகும்போது, அந்த நகைகள் தவறி கீழே விழுந்து விட்டதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர், ஸ்ரீகாளஹஸ்தி 1–டவுன் போலீசில் புகார் செய்தார்.

இந்தநிலையில் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் ஊழியாக வேலை பார்த்து வரும் ஸ்ரீகாளஹஸ்தி கொண்டமிட்டாவைச் சேர்ந்த வெங்கடரமணா (வயது 28) என்பவர், அன்று தன்னுடைய சைக்கிளில் ஸ்ரீகாளஹஸ்தி காய்கறி மார்க்கெட் வழியாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். காய்கறி மார்க்கெட் பகுதியில் சாலை ஓரம் பாலித்தீன் பை ஒன்று கிடந்ததை அவர் கண்டெடுத்தார். அதனை பிரித்துப் பார்த்தபோது, அதில் தங்கநகைகள் இருந்தது தெரிய வந்தது. அதனை எடுத்துக் கொண்டு போய் ஸ்ரீகாளஹஸ்தி போலீசில் ஒப்படைத்தார்.

பரிசு–பாராட்டு

அதைத்தொடர்ந்து ஸ்ரீகாளஹஸ்தி போலீசார், ராமசாமிநாயுடுவை வரவழைத்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். தங்கநகைகளின் அடையாளத்தை கூறியதும், அவரிடம் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளை போலீசார் ஒப்படைத்தனர். தவறவிட்ட தங்கநகைகளை கண்டெடுத்து, போலீசில் ஒப்படைத்த ஜூஸ் கடை ஊழியர் வெங்கடரமணாவின் நேர்மையை பாராட்டி அவருக்கு ரூ.5 ஆயிரம் பணத்தை ராமசாமிநாயுடு பரிசாக வழங்கி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும் செய்திகள்