7. கருவறை மொழி

மொழியின் பயன்பாடு ஆழ்மனதில் ஐக்கியமாகிறது. முயற்சியில்லாமல், சொற்களைத் தேடிப்பிடிக்காமல் சரளமாகப் பேசுகிற மொழியே சிலருக்குத் தாய்மொழி.

Update: 2017-03-19 09:39 GMT
மொழி கருவறையிலேயே முடிவாகிறது. ‘பிறக்கும்போதே தாய்மொழியின் கூறுகளோடு குழந்தைகள் இருப்பதால்தான் விரைவில் அம்மா பேசும் மொழியை சும்மா இருந்துகொண்டே கற்றுக் கொள்கிறார்கள்’ என்று நோம் சாம்ஸ்கி என்கிற அறிஞர் தெளிவுபடுத்துகிறார்.

மொழியின் பயன்பாடு ஆழ்மனதில் ஐக்கியமாகிறது. முயற்சியில்லாமல், சொற்களைத் தேடிப்பிடிக்காமல் சரளமாகப் பேசுகிற மொழியே சிலருக்குத் தாய்மொழி. அவர்கள் மூதாதையர்கள் பேசியதை சூழலின் காரணமாக ஈசல் இறகு களைப்போல இழந்துவிடுகிறார்கள்.

அந்நிய நாட்டிற்கு வயிற்றை நிரப்பச் சென்றவர்கள் அதையே வாழ்விடமாக்கி பிறந்த இடத்திலிருந்து பின்னுக்குத் தள்ளப்படுபவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்கு, முன்னோர் பேசிய மொழியைவிட முன்னே புழங்கும் மொழியே முதல் மொழி ஆகிறது.

மொழி என்பது சொற்களின் கூட்டணி அல்ல, அது முறிந்துவிடுவதற்கும் இணைந்து எழுவதற்கும். அது மண்ணின் ஆழத்தோடு மகத்துவம் உள்ளது. உண்ணும் உணவும், வீசும் காற்றும், தவழும் வெளிச்சமும் மொழியைச் செதுக்கி செம்மைப்படுத்துகின்றன. உதடுகளின் தடிமனும், அண்ணத்தின் தன்மையும், ஈறுகளின் இயல்பும் அவற்றால் தீர்மானிக்கப்படுகின்றன.

அதனால்தான் ஒரு பகுதியில் எளிதாக உச்சரிக்கப்படும் சொற்கள் இன்னொரு பகுதிக்கு எட்டியாய்க் கசக்கிறது. தமிழ்நாட்டிலேயே ‘ழகரம்’ சிலருக்கு சிகரம் ஏறுவதைப்போல சிரமமாய் இருக்கிறது.

சின்ன வயதில் கற்ற மொழி ஆழ்மனதில் ஆழமாய்ப் பதிந்துவிடுகிறது. பின்னால் கற்கும் மொழிகள் முலாமாகவே இருக்கின்றன, மூலமாக இருப்பதில்லை.

உதட்டு நுனியில் வெளிநாட்டு மொழியை உச்சரிக்கும் சிலர் அங்கிருந்து வந்தவர்களைவிட அதிகப் பாசாங்கு காட்டுவது உண்டு.

அவர்கள் மகிழ்ச்சியின்போது அந்த கடன் வாங்கிய மொழியில் அருவியாய்ப் பொழிந்து அசத்துவார்கள். ஆனால், காலில் அடிபடும்போது ‘அம்மா’ என்றே அரற்றுவார்கள். தும்மும்போது தாயையே துணைக்கழைப்பார்கள்.

வலியேற்படும்போது ‘அம்மா’ எனக் கதறுவதும், நீங்கும்போது ‘அப்பா’ என ஆசுவாசப்படுவதும் மனித இயல்பு.

மீண்டும் ஒருமுறை கதகதப்பான கருவறைக்குள் நுழைய மாட்டோமா என்ற ஏக்கமே இனவிருத்திக்கு ஆதாரம். நாம் அனைவரும் இன்னும் பேரண்டத்தின் கருப்பறைக்குள் தவழ்பவர்கள்தாமே!

மொழி என்னும் நாற்றை வயலில் நடும்போது கூடவே பண்பாடு என்கிற மண்துகள்களும் அதன் வேரில் ஒட்டிக்கொண்டு வருகின்றன என்பதை பலர் ஒத்துக்கொள்வது இல்லை.

தாய்மொழியைப் படிப்பது வெறும் வாழ்வியல் தேவைகளுக் காக மட்டும் அல்ல. நாம் வாழ்ந்த வாழ்க்கை, நம் முன்னோரின் வீரம், யாழை வைத்து விருந்தோம்பிய விவரம், வீர மரணத்தை நடுகல் இட்டுக் கொண்டாடிய தகவல்கள், பசித்தவர்களுக்கு பட்டினி இருந்து உணவளித்த செய்திகள், தமிழுக்காகத் தலையைத் தரத் தயாராக இருந்த மன்னர்கள் என வரலாற்றையும் சேர்த்து, மரம் தண்ணீரோடு ஊட்டச்சத்துகளையும் உறிஞ்சுவதைப்போல பெற்றுக்கொள்கிறோம்.

பிழைப்புக்காக பிற மொழிகளைக் கற்றாலும் பிறழாமல் வாழ்வுக்காக தாய்மொழியைக் கற்பது அவசியம். அது நம்மை மேன்மைப்படுத்தும் மெல்லிய பூங்காற்று. நமக்குள் ரகசியமாக ரசவாதம் செய்யும் அதிசயப் பயிற்சி.

அந்நியச் சூழலில் அதிக நாள் இருந்துவிட்டு சென்னை மண்ணை மிதிக்கும்போது சிலர் தமிழில் வைகிற வார்த்தைகள்கூட செவியில் விழுந்தால் வாழ்த்தாய் இனிக்கும், திட்டுகிற சொற்கள்கூட தேனாய்த் தித்திக்கும். காரணம், அது நம் மூளையில் நரம்பு வலையாகப் பின்னப்பட்டிருக் கிறது.

இரண்டு மொழிகளைக் கற்பவர்களின் மூளை செறிவானதாக இருக்கிறது என்று நரம்பியல் அறிஞர்கள் நவில்கிறார்கள். நரம்பணு இணைப்புகள் வரம்புகளைத் தாண்டி வளமை பெறுவதாகவும், சின்ன வயதிலிருந்தே அதைக் கற்பவர்களின் சாம்பல் பொருள் அடர்த்தியாவதாகவும் அறிவிக்கிறார்கள். அவர்கள் நிர்வாகத்திறனிலும், முடி வெடுப்பதிலும் முன்னிலை வகிப்பார் கள். அவர்கள் பாறையைக்கூட பஞ்சாக்குவார்கள், கடப்பாரையைக் கூட கடற்பஞ்சாக்குவார்கள்.

தாய்மொழியைக் கற்கும் வாய்ப்பு இருந்தும் அதைத் தவற விடுபவர்கள், வீட்டு வெண்ணையை விட்டுவிட்டு வெளியே கிடைக்கும் நெய்க்காக அலை பவர்கள். தமிழ்மொழியை நன்றாக அறிவதே குறைபாடாகக் கருதப்படும் இடங்களும், நிறுவனங்களும் நம் தமிழகத்தில் உண்டு. அங்கு தப்பித்தவறி தமிழில் பேசுவதுகூட தப்புத்தண்டா செய்ததற்குச் சமம். இப்படித் தமிழை அமுக்கி ஆங்கிலம் வளர்த்து இரண்டிலும் திரிசங்கு சொர்க்கமாய் திரிபவர்களைப் பார்க்கலாம். இரண்டையும் பயின்று திரிவிக்கிரமனாய் உலகம் அளப்பவர்கள் உண்டு.

செய்தி ஒன்றைப் படித்தபோது சிலிர்த்துப் போனேன்...

வாழ்க்கை சிலரை உணவுக்காகப் புரட்டிப்போட்டு விடுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் சில எளிய மக்கள் வயிற்றுப்பாட்டுக்காக தமிழ் மண்ணிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஒப்பந்த ஊழியர்களாகப் பயணித்தனர்.

வறட்சி சில நாடுகளில் புரட்சியை வரவழைக் கிறது. சில இடங்களில் இடப்பெயர்ச்சியையே ஏற்படுத்துகிறது.

தாய்த் தமிழகத்திலிருந்து கரும்புத் தோட்டங் களுக்கு ஒப்பந்தப் பணியாளர்களாக இந்தியப் பெருங்கடலில் உள்ள ரீயூனியன் தீவுக்குப் பயணப்பட்டவர் சிலர். கரும்பு உண்பவர்களுக்குத் தரும் இனிப்புக்காக தங்கள் வாழ்க்கையைக் கசப்பாக்கிக்கொண்டவர்கள், கசக்கிக்கொண்டவர்கள் பலர்.

ஆப்பிரிக்க மக்கள் அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்பட்டனர். அந்த வரலாற்றை அக்கறையோடு வாசிப்பவர்களுக்கு சர்க்கரை இனிப்பதில்லை.

பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான இந்தத் தீவில் கரும்புத் தோட்டங்களில் கசக்கிப் பிழியப்பட்ட மக்கள் சுற்றியுள்ள மனிதர்கள் பேசும் மொழியைக் கற்றுக்கொண்டால் மட்டுமே காலம் தள்ள முடியும் என்கிற நிலை.

சில நேரங்களில் கண்ணீர் நம் அடையாளங்களையும் அழிந்துவிடுகிறது. பல நேரங் களில் வியர்வையைச் சிந்துபவர்களே கண்ணீரைச் சிந்தவும் நிர்ப்பந்திக்கப்படு கிறார்கள்.

ரீயூனியனுக்குச் சென்ற தமிழ் மக்கள் காலப்போக்கில் பிரெஞ்சு மொழியை அட்சரம் பிறழாமல் பேசக் கற்றனர். கிரியோல் மொழியையும் கற்றுத் தேர்ந்தனர். சிலருக்கு தமிழ் வெறும் வரலாறு, மற்றவர்களுக்கு ஓரிரு சொற்களை உதிர்ப்பதிலேயே தகராறு.

தமிழ் தெரியாததை பெருமையாய்க் கூறும் எம் தமிழ்கூறும் தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கு இது அவசியம் எனக் கருதும் சமரசம். ஆனால் அவர் களுக்கோ முன்னோர்கள் பேசிய முத்தமிழை அறிய வேண்டும் என்கிற ஆர்வம்.

விழுதுகள் வேர்களை அறிவதற்காகத்தானே பூமிக்குள் புகுந்துகொள்கின்றன, பூக்கள் மண்ணுக்குச் செய்யும் மரியாதைதானே அதன் மடியில் விழுந்து மடிந்துபோவது. பள்ளிகளிலும் ஆலயங் களிலும் முன்னோர் பேசிய மொழியைக் கற்க அவர் களுக்கு ஆர்வம் பிறந்தது.

அவர்கள் மண்சார்ந்த உணவையும், பண்பாட்டையும், வழிபாட்டு நெறிகளையும் காவுகொடுக்கவில்லை. மொழியை மட்டுமே இழந்தனர். சிலருக்கு முகவரி தெரியாவிட்டாலும் இல்லத்திற்குச் செல்ல வழி தெரியுமே அதைப்போல.

பதினான்கு பேர்கள் கொண்ட குழு தமிழகத்திற்கு ‘பிரவாசி பாரதிய திவஸ்’ என்னும் நிகழ்வுக்காக வந்திருந்தது. அதைச் சார்ந்தவர்கள், ‘நாங்கள் மீண்டும் தமிழைக் கற்கிறோம். திருக்கோவில்களி லிருக்கும் வழிபாடு நடத்துபவர்கள் எங்களுக்கு வழிகாட்டுகிறார்கள்’ என்று குறிப்பிட்டார்கள்.

ரீயூனியன் தீவின் மொத்த மக்கட்தொகை எட்டு லட்சம். அதில் 30 சதவிகிதம் தமிழகத்து மக்கள். ஓரிரு சொற்களே அவர்களுக்கு இதுவரை அறி முகம். இந்தியாவின் கடல்கடந்த குடியுரிமை அட்டைகளைப் பெறுவதில் அவர்களுக்கு அத்தனைப் பிரச்சினை. அத்தீவில் அவர்கள் பாரம்பரியம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன.

எனவே, அவர்கள் மரபை நிரூபிப்பது சிரமமாய் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்துதான் சென்றவர்கள் என்பதற்கு ஆதாரம் எதுவும் கைவசமில்லை. இந்தியாவில் அவர்களுக்குத் தெரிந்தவர்களும் இல்லை. சென்ற இடத்தில் வேரூன்றி விடுபவர்கள் வந்த இடத்தைத் தவறவிடுவதற்கு இது ஓர் உதாரணம். முப்பது பேர் மட்டுமே இந்த அட்டைகளைப் பெற்றிருக்கிறார்கள்.

ஹெர்குலஸ் என்கிற கிரேக்கப் புனைவீரன் 12 அரிய செயல்களைச் செய்து முடிப்பான். அதையே உவமையாக்கி கடினமான பணிகளை ‘ஹெர்குலியப் பணி’ என்று அழைப்பார்கள். ராமசாமி நடராசன் என்கிற அத்தீவுத் தமிழர் அவருக்கு அட்டை கிடைத்ததை ஹெர்குலிய சாதனையாகச் சொல்லுகிறார். அவர் சரித்திர ஆசிரியர் என்பதால் புதுச்சேரியில் இருக்கும் அவர் வேர்களைத் தோண்டி அங்கிருக்கும் தூரத்துச் சொந்தத்தை அறிந்து இதை அடைந்ததாகக் குறிப்பிடுகிறார்.

தமிழர்கள் மண்ணை மறக்காமலும், மொழியைக் கைகழுவாமலும், பாரம்பரியத்தைப் புறக்கணிக்காமலும் வாழ வேண்டும் என்பதே இச்செய்தி தரும் சேதி.

(சேதி தொடரும்)

‘சோழர்களின்  ஏரி’

இந்தியப் பெருங்கடலைத் தமிழர்கள் ‘எறிதிரைக்கடல்’ என்றே அழைத்தனர். அலைகளை ஓயாமல் வீசிக்கொண்டே இருப்பதால் இப்பெயர். இதை கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் அந்தப் பெயரிலேயே ((Erythrean sea) ) அழைத்தனர். பின்னர் ஆங்கிலேயர்கள் இந்த அழகிய தமிழ்ப்பெயரை ‘இந்தியப் பெருங்கடல்’ என்று சிதைத்தனர்.

கடலுக்கு அதிகப் பெயர்கள் தமிழில்தான் உண்டு. அதிகம் புழங்கும் பொருட்களுக்கே அதிகப் பெயர் அமையும்.  

மூவேந்தர்கள் காலத்தில், கடல் அவர்களுக்குக் கட்டாந்தரையாக இருந்தது. வங்காள விரிகுடா ‘சோழர்களின் ஏரி’ என்று சொல்லப்பட்டது.

மேலும் செய்திகள்