மதுவில் மிதந்தவர் போதையில் மூழ்குபவர்களை காப்பாற்றுகிறார்

ஏழு வயதில் சக பள்ளி மாணவனை அடிப்பதற்காக குடிக்கத் தொடங்கிய ஜோன்ஸ், அதை அப்படியே தொடர்ந்து ஒருகட்டத்தில் பெருங்குடியர் என்று பெயரெடுத்து விட்டார்

Update: 2017-03-19 08:40 GMT
ழு வயதில் சக பள்ளி மாணவனை அடிப்பதற்காக குடிக்கத் தொடங்கிய ஜோன்ஸ், அதை அப்படியே தொடர்ந்து ஒருகட்டத்தில் பெருங்குடியர் என்று பெயரெடுத்து விட்டார். நன்றாக படித்திருந்தாலும் அவரால் மதுவை விடமுடியவில்லை. அதில் மூழ்கிப்போன அவர், இப்போது குடிப்பதில்லை. கூடவே போதையில் மிதப்பவர்களை காப்பாற்ற ‘புனர்ஜனி’ என்ற மையத்தையும் நடத்தி வருகிறார். தத்துவயியல் துறையில் படித்து தேறிய இவர், கேரளவர்மா கல்லூரியில் தத்துவயியல் துறை தலைவராக பணியாற்றவும் செய்கிறார். கேரளாவை சேர்ந்த ஜோன்ஸ் அங்கு பூமலை என்ற மலைப்பகுதியில் மதுவில் இருந்து மீள்வோருக்கான மையத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் ராஜி.

மதுவுக்கு மனிதர்கள் அடிமையாவது எப்படி? அதில் இருந்து மீள்வது எப்படி? என்பதை எல்லாம் சுவாரஸ்யமாக விளக்குகிறார், ஜோன்ஸ்.

“எனது பெற்றோர் ஆசிரியர்கள். எனது தந்தையை ஊர்க்காரர்கள் தங்கள் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளுக்கு அழைப்பார்கள். அவரை சந்தோஷப்படுத்துவதற்காக சாராயம் கொடுப்பார்கள். அங்கு அது தவறான பழக்கம் என்று கருதப்படாததால், என் தந்தை தொடர்ந்து குடித்தார். அவர் சில நாட்கள் சாராயம் வாங்க கடைக்கு என்னை அனுப்புவார். நானும் வாங்கி வருவேன்.

ஏழாம் வகுப்பில் ஒரு மாணவன் என்னிடம், ‘எங்கள் வீட்டில் ஒரு பாட்டில் இருக்கிறது. அதில் இருப்பதை குடித்ததும் என் தந்தை, தாயாரை அடிப்பார். ரொம்ப தைரியம் தரும் பொருள் அந்த பாட்டிலில் இருக்கிறது. அதை உனக்கு கொண்டு தருகிறேன்’ என்றான். அதை, பழைய இங்க் பாட்டில் ஒன்றில் ஊற்றிக்கொண்டுவந்து என்னிடம் தந்துவிட்டு, ‘குடித்துவிட்டு நான் சொல்லும் மாணவனை நீ அடிக்கவேண்டும்’ என்றான். அது சாராயம். குடித்துவிட்டு, அவன் சொன்ன மாணவனை அடித்தேன்.

எனக்கு படிப்பில் பெரிய அளவில் ஆர்வம் அப்போது இல்லை. அதனால் கல்லூரி அறிமுக வகுப்பு பரீட்சையில் வேண்டும் என்றே தோற்றேன். படிக்கும் ஆர்வமின்றி சுற்றிக்கொண்டிருந்தபோது என் உறவுப் பெண் ஒருவர், ‘உன்னால் படித்து தேர்ச்சியடைய முடியும். நீ தொடர்ந்து படிக்கவேண்டும்’ என்றார். அதனால் படிக்க சேர்ந்தேன். பரீட்சையில் ஜெயித்து, கேரளவர்மா கல்லூரியில் தத்துவயியல் படிக்க சேர்ந்தேன். பி.ஏ., எம்.ஏ. இரண்டிலும் முதல் தரம் பெற்று தேறினேன். மது குடிப்பதையும் விடவில்லை.

அடுத்து பல்கலைக்கழக மானிய குழு உதவித் தொகையோடு ஆய்வு படிப்பை தொடர அனுமதிகிடைத்தது. படித்த கல்லூரியிலே தற்காலிக விரிவுரையாளராக வேலையும் கிடைத்தது. குடிப்பழக்கத்தை விட்டுவிட்டு, தலைநிமிர்ந்து நடக்கவேண்டும் என்று நினைத்தேன். இடையில் ஒரு காதலும் வந்து உரசிவிட்டுப்போனது. அதனால் கொஞ்சம் பாதிக்கப்பட்டதால் உடனே வேறு பெண் பார்த்து திருமணம் செய்துகொள்ள நினைத்தேன்” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார், ஜோன்ஸ். அருகில் இருந்து அவரது மனைவி ராஜி அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“ராஜி அப்போது ஆசிரியையாக வேலைபார்த்துக்கொண்டிருந்தார். திருமணம் நடந்த இரண்டு வாரத்திலே கடுமையான விபத்தில் சிக்கினார். ஒரு கிட்னியை அகற்றவேண்டியதானது. மூன்று மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். இருந்த நகை, பணம் எல்லாம் செலவானது. அப்போது எனது விரிவுரையாளர் பணியும் போய்விட்டது. அந்த கட்டத்தில்தான் நான் பெருங்குடியன் ஆனேன்.

பின்பு ராஜி வேலைக்கு சென்றார். நான் வீட்டில் இருந்தேன். சும்மாவே இருக்க பிடிக்காமல் மாலைநேர கல்லூரியில் சட்டம் படிக்க சேர்ந்தேன். படிப்பும், கள்ளு குடித்தலும் தொடர்ந்து கொண்டிருந்தது. கள்ளு குடிப்பவனின் நெருங்கிய நண்பன் மது மட்டும்தான். உடனிருக்கும் மனிதர்கள் எல்லாம் துரும்பு போல் தான் தெரிவார்கள். எல்லா பிரச்சினைக்கும் மதுவையே அவர்கள் தீர்வாகவும் நினைப்பார்கள்” என்று தனது பழைய நினைவுகளை யதார்த்தமாக புட்டு வைக்கிறார், ஜோன்ஸ்.

இவர் ராஜியை பெண் பார்க்க சென்றபோது, குடிப்பார் என்பது பெண் வீட்டாருக்கு தெரியுமாம். ஆனால் அளவுக்கு அதிகமாக மது அருந்துவார் என்பது தெரியாமல் இருந்திருக்கிறது.

“அப்போது எனக்கு மட்டுமே வேலை இருந்தது. அது இவருக்கு ஈகோவை உருவாக்கிவிட்டது. அதனால் வேலையை ராஜினாமா செய்யும்படி கூறினார். நானும் ராஜினாமா செய்தேன். பின்பு இருவருக்கும் வேலை இல்லாத நிலை உருவானது” என்று ராஜி விளக்கம் தருகிறார்.

அந்த கஷ்டமான சூழ்நிலை ஜோன்ஸை கடுமையாக பாதித்திருக்கிறது.

“எனக்கு சாராய கடையில்கூட வேலை கிடைக்கவில்லை. ரொம்ப படித்திருக்கிறாய் என்று கூறி நிராகரித்தார்கள். வக்கீல் படிப்பை வைத்து கோர்ட்டுக்கு போக தொடங்கியபோதுதான் நான் குடிக்கு அடிமையாகிவிட்டேன் என்பது எனக்கு தெரிந்தது. பத்து காசுகூட கையில் இல்லை. குடிகாரர்களுக்கு குருட்டு புத்திதான் அதிகம் வேலை செய்யும். அதனால்தான் தற்கொலை செய்ய முடிவெடுக்கிறார்கள். நானும் அப்படி சிந்தித்தேன். அப்போது ஒருமுறை, 20 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டு, பஸ்சில் போய் விழுந்தால், நஷ்டஈடும் கிடைக்கும், இன்சூரன்ஸ் தொகையும் கிடைக்கும் என்றுகூட சிந்தித்தேன். ஆனால் பாலிசி எடுக்க ‘பிட்னெஸ்’ சான்றிதழ் தேவைப்படுமே. அதற்கு உதவ எனக்கு ஆள் இல்லை.

நிலைமை மோசமானதால் மது அடிமை மீட்பு மையத்தில் சேர்க்கப்பட்டேன். அங்கு எனக்கு வலிப்பு வந்தது. நினைவற்ற நிலை உருவானது. செத்துபோனது போல் உணர்ந்தேன். ஒரு ‘பெக்’ அடித்தால் நிலையை சரியாகிவிடும் என்பதுபோல் தோன்றும்” என்கிறார், ஜோன்ஸ்.

பின்பு கடுமையாக போராடி மதுப்பழக்கத்தில் இருந்து அவர் மீண்டிருக்கிறார். அவர் மீண்டு, 18 வருடங்கள் ஆகிவிட்டன.

மது பழக்கத்தில் இருந்து மீண்ட ஜோன்ஸ் புனர்ஜனி அமைப்பை உருவாக்க, போஸ் என்ற குடிகாரரின் செயல்பாடுகள் காரணமாக இருந்திருக்கின்றன.

“போஸ் இடம் பெற்றிருந்த குழு பால் சொசைட்டி தேர்தலில் ஜெயித்திருந்தது. நான் குடியை விட்டுவிட்டேன் என்பது அவருக்கு தெரிந்தும், ஒரு பாட்டில் மதுவோடு என் வீட்டிற்கு வந்தார். கப்பில் ஊற்றிவைத்துக்கொண்டு என்னை குடிக்குமாறு வற் புறுத்தினார். ‘போடா வெளியே’ என்று சொல்லும் அளவுக்கு எனக்கு கோபம் வந்தது. ஆனால் நான் அவ்வாறு சொல்லாமல் அமைதியாக இருந்தேன். ஏன்என்றால் நானும்கூட இவரைப்போல் வேறு யாரிடமாவது போதை மயக்கத்தில் நடந்திருப்பேன் அல்லவா! நான் குடிக்காததால் அவர் கோபத்தில் வெளியேறி சென்றார்.

மறுநாள் காலையில் அவரது மனைவி என்னை அவரது வீட்டிற்கு அழைத்தார். சென்றேன். அங்கு போஸ் போதை மயக்கத்தில் விழுந்துகிடந்தார். காலில் பலமான முறிவுக் காயம் ஏற்பட்டிருந்தது. அப்போதும், தனக்கு குடிக்க மது வேண்டும் என்று கேட்டார்.

மதுவை கையில் கொடுத்ததும், முதலில் இரண்டு பெக் மதுவை அந்த காயத்தில் ஊற்றினார். சிறிது குடித்தார். மீண்டும் இரண்டு பெக்கை காயத்தில் ஊற்றினார். மீதமிருப்பதை குடித்தார். அப்போது நான், ‘நீ இப்படி செய்தால் உன் காலை ஆபரேஷன் செய்து அகற்ற வேண்டியதாகிவிடும். நீயும் என்னைப் போன்று குடிப்பதை நிறுத்திவிடு’ என்றேன். அதற்கு அவர், ‘நானும் குடிப்பழக்கத்தில் இருந்துவிடுபடத்தான் நினைக்கிறேன். ஆனால் மீட்பு மையத்திற்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லையே!’ என்றார். அவரை அந்த மையத்தில் கொண்டு போய் சேர்த்தேன். அவரும் குடியில் இருந்து மீண்டார். அப்போதுதான் குடிப் பழக்கத்தில் இருந்து மீளவிரும்புவோருக்காக புனர்ஜனி மையத்தை தொடங்கும் எண்ணம் ஏற்பட்டது” என்கிறார், ஜோன்ஸ்.

“எங்கள் மையத்தின் செயல்பாடு ஒரு ஆய்வு போன்றது. எல்லாவற்றையும் மனந்திறந்து பேசக்கூடிய ஒரு இடம் இது. மதுவுக்கு அடிமையாவது ஒரு நோய். தனக்கு அந்த நோய் பாதித்திருக்கிறது என்று பத்து பேர் வெளிப்படையாக சொன்னால்தான் மற்றவர்கள் அதன் பாதிப்பை உணர்வார்கள். இங்கு நாங்கள் மருந்துகொடுப்பதில்லை. மருந்து அவர்களை பலவீனப்படுத்திவிடும். குடிப்பவர்களை ஜெயிலில் அடைப்பது போல் அடைத்து வைத்தும் திருத்த முடியாது. நாங்கள் அவர்கள் அருந்தும் மதுவின் அளவை சிறிது சிறிதாக குறைத்து, நிறுத்துகிறோம். கஷாயமும் கொடுப்போம். அது மதுவால் உடலில் ஏற்பட்ட விஷத்தைப்போக்கும். அதன் மூலம் ஜீரண சக்தியும் மேம்படும்.

முதல் நாள் அவரை நிறைய குடிக்க வைத்து விடுவோம். அப்போது அவர்கள் மனதில் கிடப்பதை எல்லாம் கண்டபடி கொட்டுவார்கள். அதை அப்படியே ‘டேப்’ செய்துவிடுவோம். அவருக்கு போதை தெளிந்த பின்பு அதை போட்டுக் காட்டுவோம். அப்போதுதான் அவருக்கு தான் போதையில் எப்படி நடந்து கொண்டேன் என்பது புரியும். முதலில் குடிநோயாளியை மட்டும் சிகிச்சைக்கு அனுமதித்தோம். இப்போது அவர்களது மனைவியையும் உடன் வைத்திருக்கிறோம். அதனால் நல்ல மாற்றம் தெரிகிறது. மனைவியும் ஒத்துழைத்தால்தான் கணவரை மதுவில் இருந்து முழுமையாக மீட்க முடியும்” என்கிறார், ஜோன்ஸ். 

மேலும் செய்திகள்