நோய் பரவுவதை தடுக்க காலி மனைகளை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும், பொதுமக்களுக்கு கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்

கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுவதை தடுக்க காலி மனைகளை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்

Update: 2017-03-18 23:00 GMT

புதுச்சேரி

வார இறுதி நாட்களில் கவர்னர் கிரண்பெடி சுகாதார பணிகள் மற்றும் ஆய்வுகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி நேற்று அவர் முதலியார்பேட்டை சுதானா நகரில் வழக்கம்போல் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு காலிமனைகளில் குப்பைகளை கொட்டி வைத்து இருப்பதையும், சில இடங்களில் கழிவுநீர் தேங்கி இருப்பதையும் பார்த்தார். இதுகுறித்து கவர்னரிடம் அந்த பகுதி பொதுமக்கள் முறையிட்டனர். காலி மனைகளில் இதுபோல் குப்பைகள் தேங்கி கிடப்பதால் தங்களது பகுதியில் கொசுத்தொல்லை இருப்பதுடன் வி‌ஷக்காய்ச்சல் பரவுவதற்கும் வாய்ப்பாக இருந்து வருகிறது என்று தெரிவித்தனர்.

சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்

இதைக்கேட்ட கிரண்பெடி, அந்த பகுதியில் (சுதானா நகர்) காலியாக கிடக்கும் மனைகள் பற்றிய விவரங்களை சேகரித்து அப்பகுதி மக்களுடன் சேர்ந்து அதை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுமாறு நகராட்சி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இதன்பின் குப்பைகளை கொட்டுவதை தடுப்பதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவாமல் இருக்க காலிமனைகளை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். இதுபற்றி வீடுவீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அதிகாரிகளிடம் கிரண்பெடி தெரிவித்தார்.

மேலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் காலி இடங்களில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவது குறித்தும் அப்பகுதி மக்கள் கவர்னரிடம் தெரிவித்தனர். அந்த தண்ணீரை பொதுக்கழிப்பிடங்களில் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மீண்டும் வருவேன்

மக்கள் கூறிய குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட கவர்னர் இன்னும் 3 வாரம் கழித்து அந்த பகுதியில் மீண்டும் ஆய்வுக்கு வருவதாக தெரிவித்தார். கவர்னர் நடத்திய ஆய்வின்போது புதுவை நகராட்சி ஆணையர் சந்திரசேகரன், கவர்னரின் தனிச்செயலாளர் ஸ்ரீதரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்