கருவூலங்களுக்கு செல்லாமல் அரசு இ–சேவை மையங்களில் ஓய்வூதியர்கள் நேர்காணலை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்

கருவூலங்களுக்கு செல்லாமல் அரசு இ–சேவை மையங்களில் ஓய்வூதியர்கள் நேர்காணலை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2017-03-18 22:30 GMT

ஈரோடு

ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

ஈரோடு மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்களில் மாத ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல், ஜூன் மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி நேர்காணலை பதிவு செய்யவும், நேரில் வர இயலாதவர்கள் வாழ்வுச்சான்று பெற்று கருவூலத்திற்கு அனுப்பவும் வேண்டும்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நேர்காணலுக்கு ஆஜராகி பதிவு செய்ய கருவூலத்தின் வேலைநாட்களில் வரவேண்டும். ஜீவன் பிரமான் வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட கருவூலங்களுக்கு செல்லாமலேயே அரசு இ–சேவை மையங்கள் வழியாக நேர்காணலை இணையதளத்தில் (www.jeevanpramaan.gv.in) ஆதார் அட்டை வாயிலாக பதிவு செய்ய நடப்பாண்டு முதல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை

இதுவரை ஆதார் அட்டை, வருமானவரி கணக்கு எண், ரே‌ஷன் கார்டு சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள் கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு வரும் போது ஓய்வூதிய புத்தகம், நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.

நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் ஓய்வூதிய புத்தகம், நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், ரே‌ஷன் கார்டு போன்ற ஆவணங்களின் நகல்களுடன் வாழ்வு சான்றை உரிய படிவத்தில் ஓய்வூதியம் பெறும் கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும்.

ஓய்வூதியம் நிறுத்தப்படும்

வெளிநாட்டிலுள்ள மாஜிஸ்ட்ரெட், நோட்டரி, வங்கி மேலாளர் அல்லது இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வுச் சான்று பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். ஓய்வூதியர்கள் தங்களது ஆதார் எண்ணை கருவூலத்தில் பதிவு செய்து, இணையதள வழி சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் குடும்ப ஓய்வூதியர்கள் மறுமணம் புரியவில்லை என்பதற்கான உறுதிமொழியினை சமர்ப்பிக்கவேண்டும்.

ஓய்வூதியர்கள் தற்போதைய இருப்பிட முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களையும் அளிக்கவேண்டும். ஓய்வூதியர்கள் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நேர்காணலுக்கு வரத்தவறினாலோ அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட வாழ்வுச் சான்றினை அனுப்ப தவறினாலோ ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் ஆகஸ்டு மாதம் 2017 முதல் நிறுத்தப்படும்.

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்

வாழ்வு சான்றுகளுக்கான மாதிரி படிவத்தை www.tn.gov.in/karuvoolam/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுவரை ஓய்வூதியர், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பம் அளிக்காதவர்கள் கருவூலத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

பொதுத்துறை வங்கிகளின் மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், தமிழ்நாடு மின்வாரியம், ரெயில்வே, அஞ்சல்துறை, தொழிலாளர் வைப்பு நிதித்திட்டம், மத்திய அரசு ஓய்வூதியர்கள், உள்ளாட்சி மன்ற ஓய்வூதியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. பொதுத்துறை வங்கிகளின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களின் நேர்காணல் உரிய காலவரைமுறைபடி தனியே தொடர்புடைய வங்கிகள் மூலம் மேற்கொள்ளப்படும்.

மேலும் செய்திகள்