விபத்தை ஏற்படுத்திவிட்டு நிவாரணம் வழங்காததால் தனியார் பஸ்சை சிறைபிடித்த கம்யூனிஸ்டு கட்சியினர்

விபத்தை ஏற்படுத்திவிட்டு நிவாரணம் வழங்காததால் தனியார் பஸ்சை சிறைபிடித்த கம்யூனிஸ்டு கட்சியினர்

Update: 2017-03-18 22:00 GMT

மறையூர்,

இடுக்கி மாவட்டம் மறையூர் ஆதிவாசி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தங்கேஸ்வரி. கடந்த மாதம் இவர் தனது குடும்பத்தினருடன் ஆட்டோவில் திருமூர்த்திமலை கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தார். ஆட்டோவை அனீஸ் என்பவர் ஓட்டினார். சின்னார் வனப்பகுதி அருகே சென்ற போது அந்த வழியாக மூணாறு நோக்கி சென்ற தனியார் பஸ், இவர்கள் சென்ற ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் மற்றும் தங்கேஸ்வரி குடும்பத்தினர் படுகாயமடைந்தனர்.

ஆட்டோவும் பலத்த சேதமடைந்தது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில், காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவு, ஆட்டோவை சீரமைப்பதற்கான செலவு ஆகியவற்றுக்கான பணத்தை தனியார் பஸ் நிறுவன நிர்வாகிகள் தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் கூறியபடி பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று முன்தினம் மாலையில் மூணாறு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பஸ்சை கரிமுட்டி அருகே சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த மறையூர் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்