மாவட்டம் முழுவதும் ஐகோர்ட்டு நீதிபதி திடீர் ஆய்வு சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற உத்தரவு

மாவட்டம் முழுவதும் ஐகோர்ட்டு நீதிபதி செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றும்படி உத்தரவு பிறப்பித்தார்.

Update: 2017-03-18 22:45 GMT

திண்டுக்கல்,

ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பணிகளை மாவட்ட நீதிபதி, கலெக்டர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் ஐகோர்ட்டு நீதிபதி செல்வம் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

முதலில், கொடைரோடு அருகே சிறுமலை அடிவாரத்தில் உள்ள சிறுமலை நீர்தேக்கத்தில் நீதிபதி செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கரைகளில் சீமைக்கருவேல மரங்கள் ஏராளமாக வளர்ந்திருந்தன. இதனை இன்னும் 15 நாட்களுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, ராமராஜபுரம் பகுதியில் உள்ள நீரோடையில் ஆக்கிரமித்து இருந்த சீமைக்கருவேல மரங்களை பார்வையிட்டார். அவற்றை உடனடியாக அகற்றவும் அறிவுறுத்தினார்.

முழுமையாக அகற்ற உத்தரவு

அதன்பிறகு, ராஜதானிகோட்டை அணை, மூங்கில் குளம், திண்டுக்கல் அருகே உள்ள செங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். பிறகு, பழனி வழியாக திருப்பூர் மாவட்டம் நோக்கி அவர் புறப்பட்டு சென்றார். செல்லும் வழியில் ஆங்காங்கே சீமைக்கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டு இருக்கிறதா? என்பதை பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் அகற்றப்படாமல் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை முழுவதுமாக உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தாசில்தார்கள், உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்