பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 2 பேர் கைது

பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

Update: 2017-03-18 21:06 GMT
காஞ்சீபுரம்,

சென்னை போரூர் சந்தோஷ் நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி அமிர்தவல்லி (வயது 61). இவர் தனது மகள்கள் சுகுணா (41), மகாராணி (35) ஆகியோருடன்  காஞ்சீபுரத்தை அடுத்த கம்மவார்பாளையத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக கடந்த 9–ந் தேதி பூந்தமல்லியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த டிரைவர் மற்றும் ஒருவர் நாங்கள் காஞ்சீபுரம் செல்கிறோம். உங்களை காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் விட்டு விடுகிறோம் என்று காரில் அழைத்து சென்றனர். காஞ்சீபுரத்தை அடுத்த ஆரியபெரும்பாக்கம் அருகே செல்லும்போது கார் டிரைவர் மற்றும் காரில் இருந்த ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அமிர்தவல்லி அணிந்திருந்த 20 பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

   இதுகுறித்து அமிர்தவல்லி பாலுச்செட்டிசத்திரம் போலீசில் புகார் செய்தார். காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வந்தனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் டோல்கேட்டில் பதிவான வாகன எண்களை வைத்து விசாரணை நடத்தியதில் பெண்ணிடம் 20 பவுன் நகைகளை பறித்து சென்றது சென்னையை அடுத்த பழவந்தாங்கல் நேரு காலனியை சேர்ந்த அய்யனார் (32), பெங்களூரு பகுதியை சேர்ந்த தர்‌ஷன் (25)  என்பது தெரிய வந்தது. அவர்கள் சென்னையில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அய்யனார், தர்‌ஷன் ஆயோரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அடகு வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகளை மீட்டு, திருட்டுக்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றினர்.

பின்னர் போலீசார் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் அவர்களை ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதையொட்டி அவர்கள் 2 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்