கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் திக்விஜய் சிங்கை மாற்ற முடிவு?

கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் திக்விஜய் சிங்கை மாற்ற, அந்த கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2017-03-18 20:52 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் திக்விஜய் சிங்கை மாற்ற, அந்த கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆட்சியை தக்க வைத்து கொள்ள...

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. கோவா, மணிப்பூர் மாநிலங்களில் குறைவான இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சியை பிடித்துள்ளது. பஞ்சாப்பில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2018) பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடிக்க, பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் வியூகங்களை வகுத்து வருகிறார் கள்.

குறிப்பாக கட்சி மேலிடத்திற்கு முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரிகள் பணம் கொடுத்த விவகாரத்தை பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா கையில் எடுத்துள்ளார். பா.ஜனதாவின் வியூகங்களை முறியடித்து கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்து கொள்ள, அந்த கட்சியும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

திக்விஜய் சிங்கை மாற்ற முடிவு?

இந்த நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக இருந்து வரும் திக்விஜய் சிங், இங்கு நிலவும் சில பிரச்சினைகளை சரியாக கையாளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருக்கும் திக்விஜய் சிங்கை மாற்ற காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் திக்விஜய் சிங்கை மாற்றி விட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய மந்திரி கே.வி.தாமசை கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்க மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தற்போது காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதாலும், துணைத்தலைவர் ராகுல்காந்தியும் அமெரிக்காவுக்கு சென்றிருப்பதாலும், அவர்கள் 2 பேரும் இந்தியாவுக்கு திரும்பி வந்த பின்பு, கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருக்கும் திக்விஜய் சிங்கை மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்