ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை நடைபெறும் நாளில் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை நடைபெறும் நாளில் சட்டசபையை முற்றுகையிட்டு விவசாய தொழிலாளர்கள் போராட்டம் நடத்தப்போவதாக மாநில தலைவர் லாசர் அறிவித்துள்ளார்.

Update: 2017-03-18 22:45 GMT
தஞ்சாவூர்,

ரே‌ஷன் கடைகளில் கடந்த 6 மாதமாக பொருட்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. அரிசிக்கு பதிலாக 5 கிலோ கோதுமை வழங்குவது என மத்திய அரசின் உத்தரவை அப்படியே மாநில அரசும் செயல்படுத்த தொடங்கி உள்ளது. மேலும் பருப்பு, பாமாயில், உளுந்து ஆகியவையும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தை ஏற்காமல் தமிழகத்திற்கு போதுமான உணவுப்பொருட்களின் ஒதுக்கீட்டை கேட்டு பெறுவதோடு தமிழகத்தில் உள்ள ரே‌ஷன் கடைகளில் பாகுபாடின்றி பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கண்துடைப்பு


ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை கொடுக்காமல் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் விவசாய தொழிலாளர்களுக்கு கடும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும்.

மேலும் தேசிய ஊரக வேலை திட்டத்தில் 100 நாள் வேலையை 150 நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான நிதி பட்ஜெட்டில் ரூ.1000 கோடி தான் ஒதுக்கி உள்ளது. கூடுதல் வேலை நாட்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் தேவைப்படும் பட்சத்தில் இது போதுமானது அல்ல. இதனை பார்க்கும் போது அரசு கண்துடைப்பாகத்தான் செய்கிறது.

சட்டசபை முற்றுகை


இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் மாதத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தோம். ஆனால் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் மே மாதம் ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை நடைபெறும் நாளில் சட்டசபையை 1 லட்சம் விவசாய தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் மணி, மாநில துணை செயலாளர்கள் சங்கர், பழனிசாமி, மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மனோகரன், ஆகியோர் இருந்தனர்.

மேலும் செய்திகள்