உடையநேரி காலனியில் குடிசைக்கு மர்மநபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு

புதுக்கோட்டை அருகே உடையநேரி காலனியில் உள்ள ஒரு குடிசைக்கு நேற்று மர்மநபர்கள் தீ வைத்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-03-18 23:00 GMT
திருவரங்குளம்,

புதுக்கோட்டை அருகே உடையநேரி காலனி உள்ளது. இந்த பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இலங்கை தமிழர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இலங்கை தமிழர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தை காலி செய்து விட்டு, வேறு இடத்திற்கு சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைகளை அமைத்து வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அந்த இடம் தனக்கு சொந்தமானது என ஒருவர் கூறியதால், அந்த பகுதியில் பிரச்சினை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடையநேரி காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு தெருவிளக்கு, குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் இதுவரை உடையநேரி காலனி பகுதிக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை.

குடிசைக்கு தீ வைப்பு

இந்தநிலையில் நேற்று சிலர் உடையநேரி காலனியில் எல்லை கல் ஊன்றி, கம்பி வேலிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் உடையநேரி காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கும், வேலி அமைத்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் உடையநேரி காலனியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தாசில்தார் பேச்சுவார்த்தை

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனம் வருவதற்குள் அப்பகுதி மக்கள் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், தமிழ்மாறன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் கமலக்கண்ணன் சம்பவ இடத்துக்கு வந்து உடையநேரி காலனியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வேலி அமைத்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் வேலி அமைத்தவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்