நிலுவை வழக்குகளை விரைவில் முடிக்க வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்

நிலுவை வழக்குகளை விரைவில் முடிக்க வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி சத்தியநாராயணன் கூறினார்.

Update: 2017-03-18 22:45 GMT
துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூரில் ரூ.4 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சத்தியநாராயணண் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்குமார் ரிப்பன் வெட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்.

விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி சத்தியநாராயணன் பேசியதாவது:-

அனைத்து மாவட்ட நீதிபதிகளையும், 5 வருடங்களுக்கு மேல் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் அது முடியாது. ஒரு வழக்கு 13 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. வழக்கறிஞர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும். உங்களுக்கு எந்த குறைகள் இருந்தாலும் நீதிமன்ற புறக்கணிப்பு இல்லாமல் வழக்கை முடிக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்

6 மாதங்களுக்கு முன்பு ஒரு மாதத்திற்கு மேலாக நீதிமன்றம் புறக்கணிப்பு நடந்தது. அப்போது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டாம், வாய்தா மட்டும் கொடுங்கள் என்று அறிவுறுத்தினோம். அதுபோல் செய்யாமல் சீக்கிரமாக வழக்குகளை முடிக்க வேண்டும். அதற்கு வழக்கறிஞர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள் புதிய வழக்கறிஞர்களுக்கு உத்திகளை கற்று கொடுக்க வேண்டும். இதேபோல முசிறி லால்குடி நீதிமன்ற கட்டிடங்கள் விரைவில் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அந்தஸ்து உயரும்

ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்குமார் பேசுகையில், நான் சென்னையிலேயே படித்து சென்னையிலேயே உயர்நீதிமன்ற நீதிபதியாகியிருப்பதால் கீழமை நீதி மன்றங்களில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றுகிற வழக்கறிஞர்களுக்கும், பணியாளர்களுக்கும் எவ்வளவு சிரமங்கள் இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். வழக்கறிஞர்கள் தங்களது தொழிலை முழு மனதோடு ஏற்று செய்தால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வருமானம் மட்டுமல்ல, இந்த சமுதாயத்திலே அந்தஸ்தும் உயரும் என்று கூறினார்.

விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பசீர் அஹமது, துறையூர் வக்கீல் சங்க தலைவர் உத்திராபதி மற்றும் மூத்த வக்கீல்கள் ரெங்கசாமி, ராமநாதன், ராஜூ, கார்த்திகேயன், வக்கீல் ராஜசேகர் உள்பட பலர் பேசினார்கள். முன்னதாக திருச்சி மாவட்ட நீதிபதி குமரகுரு வரவேற்றார். விழாவில் மாவட்ட கலெக்டர் பழனிசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துறையூர் தாசில்தார் சந்திரகுமார், நகராட்சி ஆணையர் நாகேந்திரன் மற்றும் அனைத்து ஊழியர்களும், வழக்கறிஞர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்