கள்ளக்காதலியை திருமணம் செய்ய இடையூறாக இருந்த மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கள்ளக்காதலியை திருமணம் செய்ய இடையூறாக இருந்த மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னராயப்பட்டணா செசன்சு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2017-03-18 20:46 GMT

சிக்கமகளூரு,

கள்ளக்காதலியை திருமணம் செய்ய இடையூறாக இருந்த மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னராயப்பட்டணா செசன்சு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:–

கள்ளக்காதல்

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா ஓசூரு கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (வயது 38). தொழிலாளி. இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த சங்கரேகவுடா என்பவரின் மகளான ஜோதிக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக அசோக் தனது மனைவி மற்றும் மகள்களுடன் ஹிரேசாவே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் அசோக்கும், அதேப்பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவனை பிரிந்து வசித்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இவர்களின் கள்ளக்காதல் ஜோதிக்கு தெரியவந்து உள்ளது. இதனால் ஜோதி, அசோக்கை கண்டித்து உள்ளார்.

கழுத்தை துண்டால் இறுக்கி கொலை

இருப்பினும் அசோக், தனது கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். மேலும் அசோக் தனது கள்ளக்காதலியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஜோதியிடம் கூறி உள்ளார். ஆனால் அதற்கு ஜோதி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். ஜோதி உயிருடன் இருந்தால் கள்ளக்காதலியை திருமணம் செய்துக்கொள்ள முடியாது. எனவே கள்ளக்காதலியை திருமணம் செய்ய இடையூறாக இருக்கும் ஜோதியை கொலை செய்ய அசோக் முடிவு செய்தார்.

அந்த கொலையை அரங்கேற்ற ஜோதியை ஹிரேசாவே அருகே உள்ள பூக்கனகட்டே பகுதிக்கு அசோக் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கு வைத்து தான் கழுத்தில் அணிந்திருந்த துண்டால் ஜோதியின் கழுத்தை அசோக் இறுக்கினார். இதில் மூச்சுத்திணறி ஜோதி சம்பவ இடத்திலேயே துடி,துடித்து செத்தார்.

ஆயுள் தண்டனை

இந்த கொலை குறித்து ஹிரேசாவே போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கொலை செய்ததாக அசோக்கை கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2014–ம் ஆண்டு ஏப்ரல் 8–ந் தேதி நடந்தது. மேலும் அவர் மீது சென்னராயப்பட்டணா செசன்சு கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து நேற்று முன்தினம் நீதிபதி நாகராஜ் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், ஜோதியை கொலை செய்த குற்றத்திற்காக அசோக்கிற்கு ஆயுள்தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அசோக்கை போலீசார் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்