காங்கிரசில் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு எஸ்.எம்.கிருஷ்ணா பா.ஜனதாவுக்கு செல்வது சரியல்ல மந்திரி ஆஞ்சனேயா பேட்டி

காங்கிரசில் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு எஸ்.எம்.கிருஷ்ணா பா.ஜனதாவுக்கு செல்வது சரியல்ல என்று மந்திரி ஆஞ்சனேயா தெரிவித்து உள்ளார்.

Update: 2017-03-18 20:30 GMT

பெங்களூரு,

காங்கிரசில் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு எஸ்.எம்.கிருஷ்ணா பா.ஜனதாவுக்கு செல்வது சரியல்ல என்று மந்திரி ஆஞ்சனேயா தெரிவித்து உள்ளார்.

பாகல்கோட்டையில் நேற்று மந்திரி ஆஞ்சனேயா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மோடி அலை வீச வாய்ப்பே இல்லை

கோவா, மணிப்பூர் மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரசை விட குறைந்த இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா, அந்த மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. அதிகார பலம், பண பலத்துடன் அந்த இரு மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, கோவா, மணிப்பூர் மாநிலங்களின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, அங்கு பா.ஜனதாவை ஆட்சி கட்டிலில் அமர வைத்துள்ளார்.

ஆனால் மற்ற மாநிலங்களில் மோடி அலை வீசுவது போல கர்நாடகத்தில் வீச வாய்ப்பே இல்லை. அதனால் இடைத்தேர்தல் நடைபெறும் நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதிகளில் பா.ஜனதாவால் வெற்றி பெற இயலாது. அந்த 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது உறுதி. 5 மாநில தேர்தல் முடிவுகள் இடைத்தேர்தலில் எந்த பாதிப்பையும் காங்கிரசுக்கு ஏற்படுத்தாது.

பா.ஜனதாவுக்கு செல்வது சரியல்ல

எஸ்.எம்.கிருஷ்ணா மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்த போது முதல்–மந்திரியாகவும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாகவும், கவர்னராவும் இருந்துள்ளார். அனைத்து பதவிகளிலும் எஸ்.எம்.கிருஷ்ணா இருந்துள்ளார். இவ்வாறு காங்கிரஸ் கட்சியில் பதவி சுகத்தையும் அனுபவித்து விட்டு பா.ஜனதாவுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா செல்வது சரியல்ல.

அவருக்கு வயதாகி விட்டது. இந்த வயதில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா செல்ல வேண்டுமா? என்று நினைக்கிறேன்.

இவ்வாறு மந்திரி ஆஞ்சனேயா கூறினார்.

மேலும் செய்திகள்