துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.2 கோடியே 90 லட்சம் செலவில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்

கூடலூரில் ரூ.2 கோடியே 90 லட்சம் செலவில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் துப்புரவு தொழிலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2017-03-18 22:45 GMT

கூடலூர்

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் 24 நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு புதிய பஸ் நிலையம் அருகே உழவர் சந்தைக்கு பின்புறம் 50 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டது. இக்குடியிருப்புகளில் துப்புரவு தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தோடு வசித்து வந்தனர். நாளடைவில் குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது.

இதனால் மழைக்காலத்தில் துப்புரவு தொழிலாளர்களின் குடும்பத்தினர் அச்சத்துடன் இருந்தனர். எனவே தங்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டி கொடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இதையொட்டி கடந்த 2014–15–ம் ஆண்டு துப்புரவு தொழிலாளர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது.

புதிய குடியிருப்புகள்

கூடலூர் நகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.1 கோடியே 70 லட்சமும், தமிழக அரசின் உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்புதல் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 20 லட்சமும் என மொத்தம் ரூ.2 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு 24 துப்புரவு தொழிலாளர்கள் குடும்பத்தினர் வசிக்கும் வகையில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது பணி நிறைவு பெற்று நேற்று அடுக்குமாடி குடியிருப்புகள் திறக்கப்பட்டு 24 பயனாளிகளிடம் ஒப்படைக்கும் விழா நடைபெற்றது.

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் கூடலூர் துப்புரவு தொழிலாளர்களின் புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து பயனாளிகளிடம் குடியிருப்புகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக ஆவின் வாரிய இணைய தலைவர் அ.மில்லர், நகர செயலாளர் சையத் அனூப்கான், நகராட்சி ஆணையாளர் பார்வதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். பின்னர் 24 பயனாளிகளிடம் குடியிருப்புகள் ஒப்படைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் ஜெரோம், பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பத்மநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்