திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா: கல்வி பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் வெற்றி அடையலாம்

“கல்விப்பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் வெற்றி அடையலாம்” என்று உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் மூர்த்தி பேசினார்.

Update: 2017-03-18 20:30 GMT

திருச்செந்தூர்,

“கல்விப்பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் வெற்றி அடையலாம்” என்று உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் மூர்த்தி பேசினார்.

பட்டமளிப்பு விழா

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியின் 17–வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள ‘பத்மஸ்ரீ‘ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலையில் நடந்தது. கல்லூரி செயலாளர் கோபாலகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரின்பராஜ் வரவேற்றுப் பேசினார்.

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 135 மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

மகத்தான சாதனைகள் படைத்தவர்

‘பத்மஸ்ரீ‘ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வி, விளையாட்டு, ஊடகம், ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனைகளை படைத்தவர். கொடைத்தன்மை மிக்கவர். சிறந்த விளையாட்டு வீரர். பல துறைகளிலும் ஆளுமைத்திறன் கொண்டவர். அவரது சேவைகளை பாராட்டி 5 பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்களை வழங்கின.

தந்தையின் வழியில் மைந்தன் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்களும் பல சாதனைகளை புரிந்து வருகிறார். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில், மிகச்சிறந்த கல்லூரியாக திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி திகழ்ந்து வருகிறது.

பெருமை மிகுந்த கல்லூரி

எனவே பெருமை மிகுந்த இந்த கல்லூரியில் பயின்ற மாணவர்கள் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும். பட்டம் பெற்ற மாணவர்கள் இங்கு பயின்றவற்றை எதிர்கால தலைமுறையினருக்கு சிறப்பாக கற்பியுங்கள். கற்பித்தல் பணி என்பது எங்கும் எப்போதும் அதிகமாக தேவைப்படுவதாகும்.

ஆசிரியர்கள் பல்வேறு திறன்களை கற்று கொடுப்பவர்களாகவும், பயிற்சி, ஊக்கம், புத்துணர்ச்சி அளிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். சமூக பொறுப்பு உடையவர்களாகவும் திகழ வேண்டும். மாணவர்களிடம் ஒழுக்கம், நன்னடத்தை பண்புகளை வளர்க்கும் திறன் பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். உடற்கல்வியியல் துறை சார்ந்த நடப்பு நிகழ்வுகளை அறிந்தவராகவும், இந்த துறையை பற்றி ஆய்வு செய்பவராகவும் இருத்தல் வேண்டும்.

பட்டம் பெற்ற மாணவர்களுக்கு இந்த நாள் திருப்புமுனையான நாள் ஆகும். வாழ்க்கை போராட்டத்தில் இப்போதுதான் அடியெடுத்து வைக்கிறீர்கள். இந்திய நாட்டின் நல்ல குடிமகனாகவும், நல்ல ஆசிரியராகவும், நல்ல ஆய்வாளராகவும் நீங்கள் வளர வேண்டும். கல்விப்பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடனும், ஒழுக்கம், மன உறுதியுடனும் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம்.

இவ்வாறு துணைவேந்தர் மூர்த்தி பேசினார்.

உறுதிமொழி

பட்டம் பெற்ற மாணவ–மாணவிகள் கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரின்பராஜ் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்.

விழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவன ஆலோசகர் உத்திர பாண்டியன், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி, ‘பத்மஸ்ரீ’ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி மற்றும் பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்