கன்னியாகுமரிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கன்னியாகுமரிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது அதிகரித்து உள்ளது.

Update: 2017-03-18 22:45 GMT
கன்னியாகுமரி,

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாதலம் கன்னியாகுமரி. இங்கு, சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை காணமுடியும். இதனால், உலகம் முழுவதில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

தற்போது, தமிழகத்தில் பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பள்ளி தேர்வுகள் நடந்து வருகிறது. இதனால், கன்னியாகுமரிக்கு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. மேலும், கன்னியாகுமரியில் தற்போது வெயில் அதிகமாக சுட்டெரிக்கிறது. பல் நேரங்களில் அனல்காற்று வீசுவதால் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் நடமாட்டம் குறைந்தே காணப்படுகிறது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்


அதேசமயம், தற்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான் நாடுகளை சேர்ந்தவர்கள் கன்னியாகுமரிக்கு படையெடுத்து உள்ளனர். தற்போது அங்கு குளிர்காலம் என்பதால் அவர்கள் கன்னியாகுமரிக்கு வந்து, கோவளம் போன்ற கடற்கரை பகுதிகளில் சூரிய குளியல் போட்டு மகிழ்கிறார்கள்.

மேலும், கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை போன்றவற்றை படகில் சென்று பார்வையிடுகிறார்கள். இதுபோல், காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம், சங்கிலித்துறை கடற்கரை ஆகிய இடங்களுக்கு சென்று மகிழ்கிறார்கள். மே மாதம் வரை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

மேலும் செய்திகள்