பணிப்பெண்ணை கடத்தியதாக வழக்கு: சசிகலாபுஷ்பாவை கைது செய்ய தடை நீட்டிப்பு

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.யின் வீட்டில் ஜான்சிராணி

Update: 2017-03-18 22:45 GMT

மதுரை,

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.யின் வீட்டில் ஜான்சிராணி, அவருடைய சகோதரி பானுமதி ஆகியோர் பணிப்பெண்களாக வேலை பார்த்தனர். அவர்கள் பாலியல் புகார் அளித்ததன்பேரில் சசிகலாபுஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வரதிலகன், மகன், தாயார் உள்பட குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் திசையன்விளை போலீசில் பானுமதி அளித்துள்ள மற்றொரு புகாரில், தன்னை சசிகலாபுஷ்பா தரப்பினர் கடத்தி வைத்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. அந்த புகாரின்பேரில் சசிகலாபுஷ்பா உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சசிகலா, அவருடைய கணவர் லிங்கேஸ்வரதிலகன், தாயார் கவுரி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர்களை கைது செய்ய இடைக்கால தடை விதித்து கடந்த 10–ந்தேதி உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி ஜே.நிஷாபானு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டபின், மனுதாரர்களை கைது செய்ய விதித்த இடைக்கால தடையை அடுத்தமாதம்(ஏப்ரல்) 20–ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்