வாலாஜா அருகே 1½ வயது பெண் குழந்தையை கடத்தி கிணற்றில் வீசி கொலை

வாலாஜா அருகே 1½ வயது பெண் குழந்தையை கடத்தி கிணற்றில் வீசி கொலை செய்தவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-03-18 21:45 GMT

வாலாஜா

வாலாஜா அருகே 1½ வயது பெண் குழந்தையை கடத்தி கிணற்றில் வீசி கொலை செய்தவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

1½ வயது பெண் குழந்தை

வேலூர் மாவட்டம் வாலாஜாவை அடுத்த நரசிங்கபுரம் கிராமம் காந்திநகரை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு 1½ வயதில் பொன்மணி என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் குழந்தையை பெற்றோர் தொட்டிலில் போட்டு தூங்க வைத்தனர். பின்னர் சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அக்கம்பக்கத்தில் உள்ள பகுதிகளில் குழந்தையை தேடி பார்த்தனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.

கிணற்றில் வீசி கொலை

அதைத்தொடர்ந்து மர்ம நபர்கள் குழந்தையை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வாலாஜா போலீசில் சாந்தி புகார் கொடுத்தார். அதன்பேரில் குழந்தையை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் வாலாஜாவை அடுத்த அல்லிகுளம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஒரு குழந்தை பிணமாக மிதப்பதாக தகவல் வந்தது.

அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கிணற்றில் பிணமாக மிதப்பதுகாணாமல் போன பொன்மணி என்பது தெரிய வந்தது.

விசாரணையில், குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி வந்து கிணற்றில் வீசி கொலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

மோப்ப நாய்

இதையடுத்து போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் மிதந்த குழந்தையின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை பிணமாக கிடந்த கிணற்று பகுதிக்கு போலீஸ் துப்பறியும் மோப்ப நாய் சன்னி வரவழைக்கப்பட்டது.

அந்த மோப்ப நாய் கிணற்று பகுதியில் இருந்து வயல்காடு வழியே சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி சென்று நரசிங்கபுரம் பைரா காலனி காந்திநகர் மனோகரன் வீட்டின் வாசல் அருகே சுற்றி வந்து நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்தி கிணற்றில் வீசி கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்