மாவட்டம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இதுவரை 22,238 விண்ணப்பங்கள் வினியோகம் 22–ந் தேதி கடைசி நாள்
நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இதுவரை 22,238 விண்ணப்பங்கள் வினியோகம்
நாமக்கல்,
ஆசிரியர் தகுதி தேர்வு தாள்–1 மற்றும் தாள்–2 முறையே ஏப்ரல் மாதம் 29–ந் தேதி மற்றும் 30–ந் தேதிகளில் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 6–ந் தேதி முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் எஸ்.பி.எம். உயர்நிலைப் பள்ளி, நாமக்கல் கந்தசாமி கண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மோகனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 30 மையங்களில் இந்த விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
22,238 விண்ணப்பங்கள் வினியோகம்இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரி கோபிதாஸ் கூறியதாவது:–
வருகிற 22–ந் தேதி வரை 30 மையங்களிலும் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும். 23–ந் தேதி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசிநாள் ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகத்தில் மட்டுமே திரும்ப அளிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வாங்கப்பட்ட மாவட்டங்களிலேயே திரும்ப அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு மாவட்டத்தில் விண்ணப்பம் பெறப்பட்டு இருப்பினும், மற்றொரு மாவட்டத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அளிக்கலாம்.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் 6,800 முதல்தாள் விண்ணப்பங்கள், 24 ஆயிரத்து 400 இரண்டாம் தாள் விண்ணப்பங்கள் என மொத்தம் 31 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் இதுவரை 4,487 முதல் தாள் விண்ணப்பங்கள், 17 ஆயிரத்து 751 இரண்டாம் தாள் விண்ணப்பங்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 238 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.