கடலூரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2017-03-18 23:00 GMT

கடலூர்,

ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை முறையாக வழங்க கோரி அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் கடலூர் உழவர் சந்தை அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக மணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார்.

இதில் சி.ஐ.டி.யூ. மாநில துணை தலைவர் பாஸ்கரன், பாட்டாளி தொழிற்சங்க மண்டல தலைவர் ஜெய்சங்கர், மறுமலர்ச்சி தொழிற்சங்க மாநில செயலாளர் மணிமாறன், தொழிலாளர் விடுதலை முன்னணி பேரவை துணை செயலாளர் கருணாநிதி, ஓய்வுபெற்ற ஊழியர் சங்க தலைவர் சேகர் மற்றும் அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

வேலை நிறுத்தம் செய்வோம்

ஆர்ப்பாட்டம் குறித்து தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேல் கூறும்போது, அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் கடந்த 6 மாத காலமாக தவணை முறையில் வழங்கப்பட்டது. தற்போது அதுவும் வழங்கப்படவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் ஓய்வுபெற்ற 65 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை முறையாக வழங்காவிட்டால் அடுத்த மாதம்(ஏப்ரல்) முதல் வாரத்தில் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்குவோம் என்றார்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசு போக்குவரத்து கழக பணிமனை வாயிலை மறித்தபடி தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பணிமனைக்கு வந்து செல்ல வேண்டிய பஸ்கள் சிலநிமிடங்கள் தாமதமாக வந்து சென்றன.

சிதம்பரம்

சிதம்பரம் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கடலூர் மண்டல தொ.மு.ச. பொருளாளர் பாலசெந்தில்நாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பாட்டாளி தொழிற்சங்கம் வீரமணி, சி.ஐ.டி.யு. மணிவண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சுந்தர், தே.மு.தி.க. ராஜமணி, ம.தி.மு.க. குமாரவேலு உள்பட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டு பேசினர்.

நெய்வேலி

இதேபோல் நெய்வேலி போக்குவரத்து பணிமனை முன்பு தொ.மு.ச செயலாளர் தில்லை கோவிந்தன் தலைமையில் நிர்வாகிகள் பழனியாண்டி, ராஜேந்திரன், ஆண்ட்ரூஸ், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் சார்பில் ராஜாராமமூர்த்தி, தே.மு.தி.க. வெங்கடேசன், பாட்டாளி தொழிற்சங்கம் அருள்ஞானவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்