காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து தென் மாவட்ட லாரிகளுக்கு பாரபட்சமின்றி மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை
காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து தென் மாவட்ட லாரிகளுக்கு பாரபட்சமின்றி மணல்
விருதுநகர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் நிருபர்களிடம் கூறியதாவது:–
விருதுநகர் மாவட்டம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானப்பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுமானத் தொழிலாளர்களும், மணல் லாரி தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தென் மாவட்டத்தில் உள்ள 500–க்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள் வருமானம் எதுவும் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தென் மாவட்டங்களில் மணல் குவாரிகள் எதுவும் இல்லாத நிலையில் கட்டுமானப்பணிகளுக்கு தேவையான மணல் கிடைப்பதற்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றுப்படுகையில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளுக்கு தான் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் திருச்சி மணல் குவாரிகளில் அந்த மாவட்ட லாரிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு தினசரி 500 லாரிகளில் ரூ.4,750–க்கு மணல் அள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
பாரபட்சம்ஆனால் தென் மாவட்டங்களில் இருந்து செல்லும் லாரிகளுக்கு திருச்சியில் உள்ள மணல் குவாரிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கப்படுவதில்லை. குளித்தலையில் உள்ள கல்குவாரியில் தான் ரூ.5,250–க்கு மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதுவும் குறைந்த எண்ணிக்கையிலான தென் மாவட்ட லாரிகளுக்கு மணல் அள்ள அனுமதி தரப்படுகிறது. இந்த பாரபட்சமான நடவடிக்கையால் தென் மாவட்டங்களில் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் கடுமையான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கரூர் மற்றும் திருச்சி மாவட்ட லாரிகள் தினமும் மணல் லோடு ஏற்றி வந்து விருதுநகர் மாவட்டத்தில் அதிக விலைக்கு விற்று விடுகின்றனர். இதனால் வங்கிக்கடன் பெற்று வீடு கட்டுவோர் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
கோரிக்கைஎனவே திருச்சி மாவட்டத்தில் காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள மணல் குவாரிகளில் தென் மாவட்ட லாரிகளுக்கு பாரபட்சமின்றி ஒரே வரிசையில் நின்று சீராக மணல் அள்ளுவதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வேலை நிறுத்தம்பேட்டியின் போது உடனிருந்த சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தேவா, வருகிற 21–ந்தேதி இதே கோரிக்கையை வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.