பைதோனியில் 2 வாலிபர்களால் இளம்பெண் கற்பழிப்பு தப்பிக்க முயன்றபோது, மாடியில் இருந்து தவறி விழுந்து காயம்

பைதோனியில், 2 வாலிபர்களால் இளம்பெண் கற்பழிக்கப்பட்டாள். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, மாடியில் இருந்து தவறி விழுந்து அந்த பெண் காயம் அடைந்தார்.

Update: 2017-03-17 22:24 GMT

மும்பை,

பைதோனியில், 2 வாலிபர்களால் இளம்பெண் கற்பழிக்கப்பட்டாள். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, மாடியில் இருந்து தவறி விழுந்து அந்த பெண் காயம் அடைந்தார்.

மாடியில் இருந்து விழுந்த இளம்பெண்

மும்பை பைதோனி, ஜஹரியா தெருவில் உள்ள சுராங்கி மேன்சன் என்ற அடுக்குமாடி கட்டிடத்தின் 5–வது மாடியில் இருந்து நேற்று அதிகாலை 4 மணியளவில் இளம்பெண் ஒருவர் ஜன்னல் வழியாக கீழே விழுந்தார். இதில் அவர் கை, கால் தலையில் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் பைதோனி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயங்கிய நிலையில் கிடந்த இளம்பெண்ணை மீட்டு ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

டாக்டர்கள் இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இதன் பயனாக அந்த இளம்பெண் மயக்கம் தெளிந்து சுயநினைவுக்கு திரும்பினார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:–

கற்பழிப்பு

27 வயதாகும் அந்த இளம்பெண் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். தான் வசிக்கும் பகுதியை சேர்ந்த சந்தோஷ் கனோஜி(வயது26) என்ற வாலிபர், மும்பையில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இளம்பெண்ணை மும்பை அழைத்து வந்தார்.

இதன் பின்னர் அங்கு வைத்து அவர் இளம்பெண் மிரட்டி கற்பழித்து வந்து உள்ளார். அவரது நண்பர் பாரூக் அப்துல்கான்(31) என்பவரது வீடு பைதோனியல் உள்ள சுராங்கி மேன்சனில் உள்ளது. நேற்றுமுன்தினம் அங்கு இளம்பெண்ணை சந்தோஷ் கனோஜி அழைத்து சென்றார். அங்கு வைத்து நண்பர்கள் இருவரும் இளம்பெண்ணை கற்பழித்து உள்ளனர். பின்னர் அங்குள்ள அறையில் இளம்பெண்ணை சிறை வைத்தனர்.

மும்பையில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்ற கனவுடன் வந்த தனக்கு சந்தோஷ் கனோஜி மற்றும் அவரது நண்பரால் ஏற்பட்ட கொடுமையை நினைத்து இளம்பெண் மனம் கொதித்தார்.

2 பேர் கைது

எனவே இருவரின் பிடியில் இருந்தும் தப்பிக்க முடிவு செய்து, அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். இந்த சமயத்தில் தான் நேற்று அதிகாலை 5–வது மாடியில் உள்ள பாரூப் அப்துல்கானின் வீட்டு ஜன்னல் வழியாக இறங்கி தப்பிக்க முயன்றபோது, கால் தவறி கீழே விழுந்து இருக்கிறார்.

அவர் நேரடியாக கீழே விழாமல் முதலாவது மாடியில் உள்ள பக்ககூறையின் மீது விழுந்து கீழே விழுந்ததால் அதிக காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரூக் அப்துல்கான் மற்றும் சந்தோஷ் கனோஜியா ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அந்த நபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்