ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது பற்றி ஓரிரு நாளில் முடிவு சரத்குமார் பேட்டி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுவது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார் தெரிவித்தார்.

Update: 2017-03-17 23:30 GMT
ராயபுரம்,

சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார், நேற்று காலை சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீனவர்கள் மற்றும் வியாபாரிகளிடம் நேரில் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களிடம் சரத்குமார் கூறியதாவது:–

தமிழகத்தில் உள்ள மீனவர்களின் பிரச்சினைகளையும், அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்து மத்திய அரசிடம் எடுத்துச்செல்ல திட்டமிட்டு உள்ளோம். இதற்காக அடுத்த வாரம் பிரதமரை சந்திக்க உள்ளேன். இதனால் மீனவ மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தேன்.

காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மீனவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். வங்கிகளில் மீனவர்களுக்கும் மீன்பிடி தொழில் செய்ய கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணூர் கடல்பகுதியில் கடலில் எண்ணெய் கலந்ததால் மீன் வியாபாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

ஆர்.கே.நகரில் போட்டியா?

தமிழக அரசின் பட்ஜெட்டில் தெளிவு இல்லை. ரூ.3 லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறிய நிதி அமைச்சர், அதனை எந்த வருமானம் மூலம் அடைக்க திட்டமிட்டு உள்ளோம் என்பதை தெரிவிக்க தவறிவிட்டார்.

நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுவது குறித்து கட்சியின் உயர்மட்டக் குழுவை கூட்டி இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் இந்திய மீனவர் சங்க தலைவர் தயாளன், ச.ம.க. மாநில துணை செயலாளர் சேவியர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தி.மு.க. வேட்பாளருக்கு வாழ்த்து

சரத்குமார் காசிமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் வந்தார். சரத்குமாரை கண்ட மருதுகணேஷ், அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

பதிலுக்கு சரத்குமாரும், மருதுகணேசுக்கு பொன்னாடை அணிவித்து தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துவிட்டு புறப்பட்டார்.

மேலும் செய்திகள்