வியாசர்பாடியில் சொகுசு காரில் சுற்றிய ரவுடி கும்பல் கைது

வியாசர்பாடியில் சொகுசு காரில் சுற்றிய ரவுடி கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சொகுசு கார் மற்றும் இரும்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2017-03-17 22:45 GMT
பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே சொகுசு காரில் சுற்றிய 5 பேர் கொண்ட ரவுடி கும்பல், ஒருவரை கத்தியை காட்டி மிரட்டிக்கொண்டு இருப்பதாக எம்.கே.பி. நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு ரவுடி கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அந்த கும்பல் வந்த சொகுசு கார் மற்றும் அவர்களிடம் இருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

3 பேர் கைது

விசாரணையில் பிடிபட்டவர்கள் சென்னையை அடுத்த பல்லாவரத்தை சேர்ந்த ரவுடிகள் தமீம் அன்சாரி(வயது 34), முத்துராஜ்(36), ராஜேஷ்(24) என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காரை சோதனை செய்த போது, அதில் ஏராளமான இரும்பு ராடுகள் இருந்தன. அவற்றை அரிவாள், கத்திகள் செய்வதற்காக எடுத்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், பிடிபட்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அவர்களின் கூட்டாளிகள் 2 பேரும் யார்? எனவும், யாரையாவது கொலை செய்வதற்காக இரும்பு கம்பிகளுடன் சொகுசு காரில் சுற்றினார்களா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்