பெங்களூருவில் மரங்கள் அழிக்கப்பட்ட சம்பவம் அரசு அதிகாரிகள் 5 பேர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் லோக் அயுக்தா நீதிபதி உத்தரவு

பெங்களூருவில் மரங்கள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகள் 5 பேர் விசாரணைக்கு கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று லோக் அயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2017-03-17 20:11 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் மரங்கள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகள் 5 பேர் விசாரணைக்கு கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று லோக் அயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி உத்தரவிட்டுள்ளார்.

மரங்கள் அழிப்பு

பெங்களூரு மாரத்தஹள்ளி வெளிவட்ட சாலை மற்றும் மகாதேவபுரா பகுதியில் சாலையோரம் 30–க்கும் மேற்பட்ட மரங்கள் நின்றன. அந்த மரங்களை திராவகம் ஊற்றியும், வி‌ஷத்தை தெளித்தும் அழித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியது. மரங்களை இப்படி அழிப்பதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில், மரங்கள் அழிக்கப்பட்டது குறித்து லோக் அயுக்தா கோர்ட்டில் சமூக ஆர்வலர் சாய்தத்தா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு லோக் அயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

அப்போது மரங்களுக்கு திராவகம் ஊற்றியும், வி‌ஷம் தெளித்தும் அழிக்கப்பட்டது குறித்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 12–ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி பெங்களூரு நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் முதன்மை செயலாளர், பெங்களூரு மாநகராட்சி கமி‌ஷனர், பெங்களூரு வளர்ச்சி ஆணையம் (பி.டி.ஏ.) கமி‌ஷனர், பெங்களூரு மாநகர போலீஸ் கமி‌ஷனர் மற்றும் பெங்களூரு மாநகராட்சி வனத்துறை தலைமை அதிகாரி ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பும்படி லோக் அயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி உத்தரவிட்டார்.

மேலும் அந்த அரசு அதிகாரிகள் 5 பேரும், இந்த வழக்கு தொடர்பாக அடுத்து நடைபெறும் விசாரணைக்கு கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்