கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை தடை செய்ய கோரி ஒப்பாரி வைக்கும் போராட்டம்

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை தடை செய்ய கோரி ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் சேவை இயக்க மகளிரணி தீர்மானம்.

Update: 2017-03-17 22:45 GMT

திருமானூர்,

ஆலோசனை கூட்டம்

அரியலூர் மாவட்டம் திருமானூரில் மக்கள் சேவை இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில மகளிரணி விவசாய பிரிவு செயலாளர் அமுதா நித்தியானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி விவசாய பிரிவு செயலாளர் மனோன்மணி, துணைச் செயலாளர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் லட்சுமி வரவேற்றார். கூட்டத்தில் மக்கள் சேவை இயக்க செயலாளர் தங்க சரவணன், மாநிலத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கூட்டத்தில் இயக்கத்தின் தலைவர் தங்க.சண்முக சுந்தரம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதிகளான திருமானூர் மற்றும் தா.பழூர் ஒன்றியங்களில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி என்ற பெயரில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால் குடிநீர் மற்றும் விவசாயம் முழுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே மணல் குவாரியை தடை செய்ய வேண்டும்.

ஒப்பாரி வைக்கும் போராட்டம்

இல்லையென்றால் திருமானூர் ஒன்றிய சுற்று வட்டார பெண்களை திரட்டி ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தப்படும். மருதையாற்று தண்ணீரை கரைவெட்டி ஏரிக்கு திருப்பி விட வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். புள்ளம்பாடி வாய்க்கால் ஆண்டி ஓடை ஏரி, மனோடை, கரைவெட்டி பெரியஏரி, சுக்கிரன் ஏரி உள்ளிட்டவைகளை தூர்வாரப்பட வேண்டும். காய்கறிகளை பாதுகாக்க குளிர்சாதன கிடங்கு அமைத்து தரவேண்டும். விவசாய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக்கடன் விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் திருச்சி மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் மகேஸ்வரி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் அம்பிகாபதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்