அ.தி.மு.க.– தி.மு.க.விடம் இருந்து தமிழகம் காப்பாற்றப்பட வேண்டிய சூழலில் இருக்கிறது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

அ.தி.மு.க.– தி.மு.க. போன்ற கட்சிகளிடம் இருந்து தமிழகம் காப்பாற்றப்பட வேண்டிய சூழலில் இருக்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2017-03-17 23:00 GMT

மதுரை,

செயல் வீரர்கள் கூட்டம்

மதுரை மாநகர் பா.ஜ.க. செயல்வீரர்கள் கூட்டம் மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் சசிராமன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

தமிழகத்தில் மாற்றம் தேவை என்பதை உணர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில், வெற்றி பெறுவதற்காக பணியாற்றி வருகிறோம். அ.தி.மு.க. குழப்பமான சூழ்நிலையில் இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை யார் கைப்பற்றுவது என்பதில் பலத்த போட்டி நிலவுகிறது. இதற்கிடையே ஜெ.தீபா அணியும் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறது. இதன் மூலம் அ.தி.மு.க. 3 துண்டுகளாக பிரிந்த இந்த தேர்தலை சந்திக்கிறது.

டி.டி.வி. தினகரனை வேட்பாளராக அறிவித்ததன் மூலம் மீண்டும் குடும்ப அரசியல் வர இருக்கிறது. யாரை வேண்டாம் என்று ஜெயலலிதா சொன்னாரோ அவர் வேட்பாளராக களம் இறங்குகிறார். இது அ.தி.மு.க. தொண்டர்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது. 3 மாதங்களில் 3 முதல்– அமைச்சர்களை சந்தித்த அ.தி.மு.க.வில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியின் பதவிக்கு ஆபத்து வர இருக்கிறது.

பணப்பட்டுவாடா

பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் ஆர்.கே.நகர் மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் தெளிவாக வாக்களிப்பார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது. பணப்பட்டுவாடா குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேணடும்.

அ.தி.மு.க. பிரச்சினைகளை தனக்கு சாதகமாக்கி தமிழகத்தில் ஆட்சி அமைத்து விடலாம் என மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். மக்கள், மு.க.ஸ்டாலினை நம்ப தயாராக இல்லை. அ.தி.மு.க.– தி.மு.க. போன்ற கட்சிகளிடம் இருந்து தமிழகம் காப்பாற்றப்பட வேண்டிய சூழலில் இருக்கிறது.

தமிழகத்திற்கு பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும். அது பாரதீய ஜனதாவால் மட்டுமே தர முடியும். ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து பா.ஜ.க. தனது வெற்றியை தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்