முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டு சேலத்தில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டு சேலத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Update: 2017-03-17 23:30 GMT

சேலம்,

ஆர்ப்பாட்டம்

டெல்லியில் உள்ள ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த சேலம் மாணவர் முத்துகிருஷ்ணன் அங்கு திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து நேற்று முன்தினம் அவரது உடல் சேலம் கொண்டு வரப்பட்டு செவ்வாய்பேட்டையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், இதனால் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும், அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், ரோஹித் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சேலம் அரசு கலைக்கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அரசு வேலை வழங்க வேண்டும்

இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதன் மாநில தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்துகுமரன், மாவட்டக்குழு உறுப்பினர் தெய்வாணை உள்பட கல்லூரி மாணவ–மாணவிகள் பலர் கலந்து கொண்டு, முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டும், அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் மாரியப்பன் நிருபர்களிடம் கூறுகையில், டெல்லியில் உயிரிழந்த மாணவர் முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மாணவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு வழங்கிய ரூ.3 லட்சம் நிவாரணம் போதாது. மத்திய அரசும் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். மேலும், அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

சாதி பாகுபாடு நிலவுகிறது

மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் இடையே சாதி பாகுபாடு நிலவுகிறது. அதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துகிருஷ்ணனின் மரணம் போல் இனிமேல் எந்தஒரு சம்பவமும் நடைபெறக்கூடாது. அதற்கு ரோஹித் சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும், என்றார்.

மேலும் செய்திகள்