சேலம் மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் ரூ.60 லட்சம் அபராதம் வசூல் போலீஸ் துணை கமி‌ஷனர் தகவல்

சேலம் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் ராமகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Update: 2017-03-17 22:45 GMT

சேலம்,

சேலம் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் ராமகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, ஏ.டி.எம். ரகசிய நம்பரை சிலர் கேட்கிறார்கள். விவரம் தெரியாமல் நம்பரை கொடுத்துவிட்டால், அடுத்த நொடி அவர்களது வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் எடுத்து விடுவதாக ஏராளமான புகார்கள் வருகிறது. கடந்த 2 மாதத்தில் இது தொடர்பாக 30 புகார்கள் வந்துள்ளது. இந்த செயலில் ஈடுபடும் ஆசாமிகள், போலி முகவரிகளை கொடுத்து சிம் கார்டுகளை வாங்கி மக்களை தொடர்பு கொள்வதால், அவர்களை பிடிக்க முடியவில்லை. எனவே, இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்.

இதேபோல், வீடுகளில் கண்காணிப்பு கேமரா வைக்க பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகிறோம். போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து அபராதமாக இதுவரை ரூ.60 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அபராதம் வசூலிப்பது எங்களது நோக்கம் இல்லை. விதிமுறைகளை கடைபிடிக்கதான் இவ்வாறு செய்கிறோம். போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அவ்வப்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சேலம் மாநகர போக்குவரத்தில் 2 பிரிவுகள் உள்ளது. கூடுதலாக மற்றொரு பிரிவு ஏற்படுத்தி, 50 போலீசாரை நியமிக்க திட்டமிட்டுள்ளோம். இதனால் போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை குறையும்.

முன்னாள் டி.ஜி.பி.ராமானுஜம் உறவினர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போனது தொடர்பாக எங்களுக்கு 3 பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் உருவம் தெளிவாக பதிவாகியுள்ளது. இன்னும் சில நாட்களில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள். இவ்வாறு துணை கமி‌ஷனர் ராமகிருஷ்ணன் கூறினார்.

மேலும் செய்திகள்