20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல் 29 பெண்கள் உள்பட 269 பேர் கைது

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் சாலை மறியல் போராட்டத்தில்

Update: 2017-03-17 23:00 GMT

விழுப்புரம்,

4–வது நாளாக வேலை நிறுத்தம்

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த சட்டத்தில் உள்ளபடி ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் தனி ஊழியர் கட்டமைப்பை உருவாக்க வேண்டும், பதவி உயர்வு பெற்ற ஒன்றிய பொறியாளர்கள், உதவி பொறியாளர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் 4–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இந்நிலையில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு மாநில பொருளாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் கொளஞ்சிவேல், செயலாளர் ரத்தினம், பொருளாளர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த மறியல் போராட்டம் காரணமாக விழுப்புரம்– திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுருளிராஜா, சங்கர், இன்ஸ்பெக்டர்கள் ராஜன், செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

269 பேர் கைது

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 29 பெண்கள் உள்பட 269 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்