வங்கி கணக்கை வேறு கிளைக்கு மாற்றிய விவகாரம்: வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு மீண்டும் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

வங்கி கணக்கை வேறு கிளைக்கு மாற்றியதால் திருக்கோஷ்டியூரில் வாடிக்கையாளர்கள்

Update: 2017-03-17 23:00 GMT

திருப்பத்தூர்

வங்கி கணக்கு மாற்றம்

திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் தேசிய மையமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் திருக்கோஷ்டியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான வடமாவளி, சுள்ளங்குடி, பிராமணம்பட்டி, கருவேல்குறிச்சி, குண்டேந்தல்பட்டி, வைரவன்பட்டி, தானிப்பட்டி, அரளிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்தநிலையில் வங்கி நிர்வாகம், திருக்கோஷ்டியூர் கிளையில் உள்ள வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளை அந்த ஊரின் அருகே உள்ள பட்டமங்கலம் வங்கி கிளைக்கு மாற்றம் செய்துள்ளது.

இதையறிந்த வாடிக்கையாளர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வங்கி அதிகாரிகள் மற்றும் திருக்கோஷ்டியூர் போலீசார் வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மீண்டும் போராட்டம்

இந்தநிலையில் அந்த பிரச்சினைக்கு வங்கி அதிகாரிகள் உரிய தீர்வு காணாததால் நேற்று மீண்டும் வங்கியை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து வங்கியின் முதுநிலை மேலாளர் திருவேலிஸ்வரன், திருக்கோஷ்டியூர் கிளை மேலாளர் அஜயதாஸ், திருப்பத்தூர் தாசில்தார் கந்தசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணரவி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பட்டமங்கலம் வங்கி கிளைக்கு மாற்றப்பட்ட வங்கி கணக்குகள் அனைத்தும் மீண்டும் திருக்கோஷ்டியூர் வங்கி கிளைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது.

மேலும் செய்திகள்