கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் போலீஸ் கமி‌ஷனருக்கு, நீதிபதி சரமாரி கேள்வி

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக போலீஸ் கமி‌ஷனருக்கு என்ன தயக்கம் உள்ளது? ஐகோர்ட்டு நீதிபதி சரமாரியாக கேள்வி.

Update: 2017-03-16 22:30 GMT
சென்னை,

ஐகோர்ட்டு என்ன பாவ பூமியா? கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக போலீஸ் கமி‌ஷனருக்கு என்ன தயக்கம் உள்ளது? என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதுகாப்பு வழங்கவேண்டும்

சென்னை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் அண்ணாமலைக்கு பல வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு சொற்ப தொகையை சொத்து வரியாக சென்னை மாநகராட்சி நிர்ணயம் செய்துள்ளது. எனவே, இந்த சொத்து வரியை மறு நிர்ணயம் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த பொன்.தங்கவேலு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘இந்த வழக்கு பொதுநல வழக்கின் தன்மையில் உள்ளதால், தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வின் விசாரணைக்கு பரிந்துரை செய்கிறேன். மேலும், வழக்கு தொடர்ந்த பொன்.தங்கவேலுவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுவதால், தகுந்த பாதுகாப்பினை சென்னை போலீஸ் கமி‌ஷனர் வழங்கவேண்டும்’ என்று கடந்த ஆண்டு டிசம்பர் 2–ந் தேதி உத்தரவிட்டார்.

அவமதிப்பு வழக்கு

ஐகோர்ட்டின் உத்தரவின்படி மனுதாரர் பொன்.தங்கவேலுவுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் அவர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். அதில், ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் நகலுடன், போலீஸ் கமி‌ஷனருக்கு கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஐகோர்ட்டின் உத்தரவை அவர் வேண்டுமென்றே அவமதித்துள்ளார் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் பி.சூரியபிரகாசம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, போலீஸ் கமி‌ஷனருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

எப்படி மதிப்பார்கள்?

‘ஐகோர்ட்டு உத்தரவிட்டு 3 மாதங்களாகியும் அதை போலீஸ் கமி‌ஷனர் அமல்படுத்தாமல் உள்ளார். போலீஸ் கமி‌ஷனரே உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால், கீழ்நிலை அதிகாரிகள் எப்படி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு மதிப்பு கொடுப்பார்கள்? எனவே, இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கிற்கு போலீஸ் கமி‌ஷனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும். அவர் நேரில் ஆஜராவாரா? அல்லது ஆஜராக உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும் ஐகோர்ட்டு என்ன பாவ பூமியா? கோர்ட்டில் ஆஜர் ஆவதில் கமி‌ஷனருக்கு என்ன தயக்கம்? அவர் எப்போது ஆஜர் ஆவார் என்பதை கேட்டு பிற்பகலில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், மாலை 4.30 மணி வரை அட்வகேட் ஜெனரல் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து நீதிபதி, அங்கிருந்த அரசு வக்கீலிடம், ‘அட்வகேட் ஜெனரல் எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை’ என்றார்.

தகவல் இல்லை

அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி, அதுகுறித்து விவரங்களை சிறிது நேரத்தில் தெரிவிப்பதாக கூறினார். ஆனால் நீதிமன்ற வேலை நேரம் முடிந்து, நீதிபதி தன்னுடைய சேம்பருக்கு சென்ற பின்னரும், எந்த தகவலையும் அட்வகேட் ஜெனரலிடம் இருந்து வரவில்லை.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் எப்போது போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆஜராவார்? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் ஐகோர்ட்டுக்கு தெரிவிக்காதது, பரபரப்பான சூழ்நிலையை உண்டாக்கியுள்ளது. 

மேலும் செய்திகள்