போதைப்பொருள் விற்பனை கும்பலை ஒடுக்க நடவடிக்கை மேல்–சபையில் மந்திரி பரமேஸ்வர் தகவல்
கர்நாடகத்திதில் போதைப்பொருள் விற்பனை கும்பலை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேல்–சபையில் மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்திதில் போதைப்பொருள் விற்பனை கும்பலை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேல்–சபையில் மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
கர்நாடக மேல்–சபையில் நேற்று கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் சோமண்ணா கேட்ட கேள்விக்கு போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பதில் அளிக்கையில் கூறியதாவது:–
போதைப்பொருள் விற்பனைகர்நாடகத்தில் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்யும் பணியில் நைஜீரியா நாட்டை சேர்ந்த மாணவர்கள்தான் அதிகமாக ஈடுபடுகிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு நாடு கடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலத்தில் 45 போலீஸ் நிலையங்களின் எல்லை பகுதிகளுக்குள் இந்த போதைப்பொருள் விற்பனை நடப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பள்ளி–கல்லூரி மாணவ–மாணவிகளை குறிவைத்து இந்த போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது. அத்தகைய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நைஜீரியாவை சேர்ந்த 23 பேரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசா காலம் முடிந்த பிறகும் அவர்கள் சட்டவிரோதமாக இங்கேயே(பெங்களூருவில்) தங்கியுள்ளனர். இதுகுறித்து வெளியுறவுத்துறை கவனம் செலுத்த வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும்மேலும் போதைப்பொருள் விற்பனை கும்பலை ஒடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவாவில் தங்கியுள்ள வெளிநாட்டு மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு அவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள். அதே போல் இங்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.