இட்டமொழி அருகே குடிநீர் கேட்டு, காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
இட்டமொழி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் நாங்குநேரி– திசையன்விளை சாலையில் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இட்டமொழி,
இட்டமொழி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் நாங்குநேரி– திசையன்விளை சாலையில் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாமிரபரணி குடிநீர்நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே உள்ள சங்கனாங்குளம் பஞ்சாயத்து சிவந்தியாபுரம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் இந்த கிராமத்துக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
அதாவது தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் திசையன்விளைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் குழாயில் இருந்து பிரித்து, சிவந்தியாபுரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை ஏற்றி அதன்பிறகு கிராம மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
சாலைமறியல்தற்போது சிவந்தியாபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் ஏற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் சிவந்தியாபுரம் கிராம மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
எனவே மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றாத அதிகாரிகளை கண்டித்து நேற்று மதியம் 3 மணி அளவில் நாங்குநேரி– திசையன்விளை சாலையில் சிவந்தியாபுரம் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். கிராம மக்களின் இந்த திடீர் போராட்டத்தினால் சுமார் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சமாதான கூட்டம்தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் ரசில் மற்றும் திசையன்விளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நாளை (அதாவது இன்று) நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தப்படும் என்றும், அப்போது குடிநீர் பிரச்சினை பற்றி பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.