பாவூர்சத்திரம் அருகே பரிதாபம் ஓடும் லோடு ஆட்டோவில் இருந்த பலகைகள் சரிந்து விழுந்து வாலிபர் சாவு

பாவூர்சத்திரம் அருகே ஓடும் லோடு ஆட்டோவில் இருந்த பலகைகள் சரிந்து விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-03-16 21:00 GMT

பாவூர்சத்திரம்,

பாவூர்சத்திரம் அருகே ஓடும் லோடு ஆட்டோவில் இருந்த பலகைகள் சரிந்து விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார். 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லோடு ஆட்டோ

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள அயன்சிங்கம்பட்டியை சேர்ந்தவர்கள் சட்டநாதன் (வயது 30), சீனிவாசகபெருமாள் (26), மணிகண்டன் (28), துரை (24), மணி (28). இவர்கள் 5 பேரும் ஒரு லோடு ஆட்டோவில் செங்கோட்டை அருகே பிரானூர் பார்டரில் உள்ள ஒரு மரக்கடைக்கு சென்றனர். அங்கு மரப்பலகைகளை வாங்கி விட்டு ஊருக்கு வந்தனர்.

வரும் வழியில் விறகு வாங்குவதற்காக பாவூர்சத்திரம் நோக்கி வந்தனர். லோடு ஆட்டோவை அதே ஊரைச் சேர்ந்த இசக்கிராஜன் (30) என்பவர் ஓட்டி வந்தார். அவருக்கு அருகில் துரை, மணி ஆகிய இருவரும் அமர்ந்து இருந்தனர். சட்டநாதன் உள்பட 3 பேரும் லோடு ஆட்டோவின் பின்புறம் பலகைகளில் அமர்ந்து இருந்தனர்.

3 பேர் காயம்

நெல்லை– தென்காசி ரோட்டில் பாவூர்சத்திரம் ஊருக்கு மேற்கே உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் லோடு ஆட்டோ வந்த போது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக டிரைவர், லோடு ஆட்டோவை சாலையின் ஓரத்தில் இறக்கி ஏற்றியதாக தெரிகிறது.

அப்போது லோடு ஆட்டோவில் இருந்த பலகைகள் சரிந்து ரோட்டில் விழுந்தன. இதில் பலகைகள் மீது அமர்ந்திருந்த சட்டநாதன், சீனிவாசகபெருமாள், மணிகண்டன் ஆகிய 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக பலகைகளுடன் ரோட்டில் விழுந்து காயம் அடைந்தனர்.

பரிதாப சாவு

தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் சட்டநாதன் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் குறித்து ஆட்டோ டிரைவர் இசக்கிராஜனிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்