கடலூர் மாவட்டத்தில் 683 ஊராட்சிகளிலும் கழிவறை வசதி அமைத்து கொடுக்க நடவடிக்கை கலெக்டர் ராஜேஷ் தகவல்

கடலூர் மாவட்டத்தில் 683 ஊராட்சிகளிலும் கழிவறை வசதி அமைத்து கொடுக்க நடவடிக்கை

Update: 2017-03-16 22:45 GMT

கடலூர்,

பதக்கம்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் கடலூர் மாவட்டத்தில் கலெக்டர் ராஜேஷ் தலைமையில் உறுதிமொழி ஏற்றல், மனித சங்கிலி, மரம் நடுதல், கோவில்களை தூய்மைப்படுத்துதல், பொது இடம், பள்ளி, அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனை, அரசு அலுவலங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களை சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் குழந்தைகள், இளம்பெண்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகள், மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு பேச்சு, ஓவியப்போட்டி, இருவரி வாசகப்போட்டி, நாடகம், கோலம், கவிதை, பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற 60 பேருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

விழாவில் கலெக்டர் ராஜேஷ் தலைமை தாங்கி 60 பேருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

கழிவறை

தூய்மையை பேணுவோம் தொடர்பான விழிப்புணர்வு ஒரு மக்கள் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு கிராமப்புறங்களில் உள்ள மக்கள் சுயமாக உழைத்து முன்னேறுவதற்காக சுய உதவிக்குழுக்கள் போன்றவற்றை அமைத்து கடன் உதவிகள் வழங்கி வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க 683 ஊராட்சிகளிலும் கழிவறை வசதி அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தூய்மையின் தூதுவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும். படிப்போடு நின்று விடாமல் சமூகத்தோடு தொடர்புடைய வி‌ஷயங்களையும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ராஜேஷ் பேசினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, மாவட்ட சமூக நல அலுவலர் மீனா, புதுவாழ்வு திட்டத்தின் மாவட்ட மேலாளர் சுதாதேவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) நாகலட்சுமி, குழந்தைகள் நலக்குழும தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன், தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தானராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்