தர்மபுரியில் மத்திய, மாநில பொதுத்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் மத்திய, மாநில பொதுத்துறை ஓய்வூதியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-03-16 23:15 GMT

தர்மபுரி,

ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மத்திய அரசு ஊழியர்களின் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும், தர்மபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சவுந்தரம் தலைமை தாங்கினார்.

கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பழனிச்சாமி, அஞ்சல் ஓய்வூதிய சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் வணங்காமுடி, எல்.ஐ.சி. ஓய்வூதியர் சங்க நிர்வாகி சோமசுந்தரம், மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல சங்க மாவட்ட செயலாளர் விஜயன், அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் குப்புசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

பயனளிப்பு ஓய்வூதியம்

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் 7–வது ஊதிய கமி‌ஷனில் ஊழியர்கள் கேட்ட குறைந்த பட்ச அடிப்படை ஊதிய தொகையான ரூ.26 ஆயிரத்தை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 7–வது ஊதிய கமி‌ஷன் பரிந்துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஊதிய கமி‌ஷன் பரிந்துரைத்த பிரிவை மத்திய அரசு ஏற்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மற்றும் படிகளை உயர்த்த வேண்டும். அனைவருக்கும் பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மத்திய, மாநில அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் அறிவழகன், பழனிமுத்து, கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கரன், கிருஷ்ணன் மற்றும் ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்