தேவூர் அருகே புதிய மதுபான கடைக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்

தேவூர் அருகே புதிதாக தொடங்கப்படும் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-03-16 23:15 GMT

தேவூர்,

புதிய மதுபானக்கடை

தேவூர் அருகே அம்மாபாளையம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மதுபானக்கடை செயல்பட்டு வந்தது. இந்த மதுபானக்கடையை இடமாற்றம் செய்து பாலிருச்சம்பாளையம் பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே புதிதாக மதுபானக்கடை அமைக்க திட்டமிடப்பட்டு கடையும் கட்டப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பாலிருச்சம்பாளையம் பகுதியில் உள்ள புதிய கடைக்கு மதுபானங்கள் கொண்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பாலிருச்சம்பாளையம், சுண்ணாம்பு கரட்டூர், கைகோளபாளையம், வெள்ளாளபாளையம், மேட்டுபாளையம் உள்பட சுற்றுவட்டார கிராம மக்கள் பலர் இரவில் அந்த மதுபானக்கடை அமைக்க உள்ள கட்டிடம் முன்பு திரண்டனர். அங்கு அவர்கள் மதுபாட்டில்களை வைக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்து கடை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

சாலை மறியல்

இதையறிந்த தேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் மதுபானங்களை கடையில் வைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து மதுபானங்களை கொண்டு வந்தவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

இதனிடையே நேற்று காலை 9 மணியளவில் பாலிருச்சம்பாளையம் பகுதியில் மதுபான கடை வைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:–

பாலிருச்சம்பாளையம் பகுதியில் புதிதாக தொடங்க உள்ள மதுபானக்கடை சாலையோரத்தில் உள்ளது. இந்த கடை உள்ள சாலை வழியாக தான் சுண்ணாம்பு கரட்டூர், பாலிருச்சம்பாளையம், வெள்ளாளபாளையம், ராணா தோட்டம், கைகோளபாளையம், மேட்டுபாளையம், காவேரிப்பட்டி, வெள்ளைபிள்ளையார் கோவில் உள்பட கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த கூலிவேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தினமும் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் மதுபானக்கடையை இங்கு அமைத்தால் மதுஅருந்துபவர்களால் பஸ் நிறுத்த பகுதியில் நிற்கும் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதை தவிர்க்கும் விதமாக இந்த பகுதியில் மதுபானக்கடை வைப்பதை தவிர்த்து வேறு ஏதாவது பகுதிக்கு கடையை மாற்றலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த சாலை மறியலை அடுத்து, அதிகாரிகள் யாரும் வராத நிலையில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்