நாகையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நாகையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2017-03-15 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் முதல் கொள்ளிடம் வரை நகராட்சி மற்றும் பேரூராட்சி, ஒன்றிய பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் தங்கஅய்யாசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் அன்பழகன், கட்சியை சேர்ந்த பன்னீர், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் பயிர்கள் கருகியது. இதனால் விவசாயிகள் வேதனையில் உயிரிழந்து வருகின்றனர். எனவே அதனை தடுத்து நிறுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் முதல் கொள்ளிடம் வரை அனைத்து நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றிய பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை

நாகை மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள், ஆறுகளை தூர்வாரி மழைக்காலங்களில் தண்ணீரை சேமிக்க முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நாகை மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தமிழக அரசு, குழு அமைத்து கண்காணித்து பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் நாகை தெற்கு மாவட்ட தலைவர் கோபி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்