கெத்தையில் ஒரே நாளில் 204 மி.மீட்டர் மழை பதிவு
கெத்தையில் ஒரே நாளில் 204 மி.மீட்டர் மழை பெய்தது. மழை நீரில் விழுந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
குன்னூர்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. அவ்வப்போது லேசான மழை பெய்து விட்டு பருவமழை நின்று விட்டது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. மழை பொய்த்து போனதால் உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் நீலகிரி மாவட்டத்தில் மழை வேண்டி ஆங்காங்கே மக்கள் சிறப்பு பூஜைகளை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது. கெத்தையில் அதிகபட்சமாக 204 மி.மீட்டர் மழையும், கோத்தகிரியில் 173 மி.மீட்டரும், குன்னூரில் 100 மி.மீட்டரும், பர்லியாரில் 70 மி.மீட்டரும், குந்தாவில் 68 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 820 மி.மீட்டர் மழை பெய்தது. இதன் சராசரி 48.28 ஆகும்.
தடுப்பு சுவர் இடிந்ததுபலத்த மழை காரணமாக குன்னூர் ஆப்பிள் பீ ரோட்டில் உள்ள ஒரு வீட்டின் முன்புறம் இருந்த தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. வள்ளுவர் நகரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரியும் மாரிமுத்து என்பவரது வீட்டின் தடுப்பு சுவரும் இடிந்து விழுந்தது. இதனால் அவரது வீடு அந்தரத்தில் தொங்கி வருகிறது. மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனை நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
கோத்தகிரி ஹோப்பார்க் பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் தங்களது உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். கிரேக்மோர் பகுதியில் உள்ள பாலத்தில் அடித்து வரப்பட்ட செடி, கொடிகளை பொது மக்கள் அகற்றினர்.
டிரைவர் சாவுகுன்னூர் ஓட்டுப்பட்டறையை சேர்ந்தவர் மணி (வயது 53). கார் டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. மணி தனது அண்ணன் கணேசனுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் குன்னூர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது மணி மதுகுடித்து விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். போதையில் தள்ளாடிய படி வந்த அவர் எதிர்பாராதவிதமாக ஓட்டுப்பட்டறை சாலையில் தேங்கி கிடந்த மழைநீரில் விழுந்தார். ஆனால் அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. மழைநீர் அதிகளவில் வந்ததால் மூச்சுத்திணறி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலக்கம்பை அருகே உள்ள தூதூர்மட்டம் மற்றும் கோத்தகிரி அருகே உள்ள கேர்கம்பை, வ.உ.சி. நகரில் 40 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.