வங்கி அதிகாரி வீட்டில் ரூ.18 லட்சம் நகை–பணம் கொள்ளை போலீசார் விசாரணை
சேலத்தில் வங்கி அதிகாரி வீட்டில் ரூ.18 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை போனது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி உதவி மேலாளர் சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் சரகத்திற்குட்பட்ட சின்னதிருப்பதி கோகுல்நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார்(
கன்னங்குறிச்சி,
சேலத்தில் வங்கி அதிகாரி வீட்டில் ரூ.18 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை போனது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கி உதவி மேலாளர்சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் சரகத்திற்குட்பட்ட சின்னதிருப்பதி கோகுல்நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது29). இவர் ஜலகண்டாபுரம் அருகே சின்னாகவுண்டாபுரம் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் அவர், ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ராமானுஜத்தின் உறவினர் ஆவார்.
அசோக்குமாரின் மனைவி திவ்யா. இவர் மல்லூரில் உள்ள ஒரு பயிற்சி நிலையத்தில் வங்கி தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் அசோக்குமார் பணிக்காகவும், திவ்யா பயிற்சி நிலையத்துக்கும் சென்றுவிட்டனர். இந்தநிலையில் மாலை சுமார் 4.30 மணி அளவில் அவருடைய வீட்டின் வெளிக்கதவின் பூட்டு உடைந்து கிடப்பதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் பார்த்தனர்.
90 பவுன் நகைகள் கொள்ளைஇதனால் சந்தேகமடைந்த அவர்கள் இதுகுறித்து உடனே அசோக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது வீட்டில் இருந்த கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதையடுத்து அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் 3 பீரோக்களில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.
மேலும் அந்த பீரோக்களில் இருந்த 90 பவுன் நகைகளும், ரூ.40 ஆயிரமும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன்மதிப்பு ரூ.18 லட்சம் என கூறப்படுகிறது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் போலீஸ் உதவி கமிஷனர் நமச்சிவாயம், கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணைமேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வந்து கொள்ளையர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து அங்கிருந்து சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதனிடையே மாலையில் அசோக்குமாரின் வீட்டில் இருந்து மர்ம ஆசாமி ஒருவன் ஓடுவதை சிலர் பார்த்து உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர். மேலும் போலீசார் அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமரா மூலமும் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். வங்கி உதவி மேலாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.