மீஞ்சூர் அருகே பெண் கொலை வழக்கில் 2 பேர் கைது

மீஞ்சூர் அருகே பெண் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-03-03 22:34 GMT
மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே பெண் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிணமாக கிடந்தார்

மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு ராஜாஜி தெருவில் வசிப்பவர் ஜப்பார் (வயது 38). இவர் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடை ஒன்றில் வெள்ளிப்பொருட்கள் உருக்கும் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பெயர் பில்சத் (35). இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 7 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஜப்பார் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். பில்சத் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் எடுத்துக்கொண்டு ஊழியர் ஒருவர் பில்சத் வீட்டுக்கு வந்தார். அப்போது, பில்சத் ரத்த வெள்ளத்தில் தரையில் பிணமாக கிடந்தார். வீட்டில் வேறு யாரும் இல்லை. உடனே அந்த ஊழியர் இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறினார். அவர்கள் மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கைது

அதன்பேரில், பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, வருவாய் ஆய்வாளர் உமாசங்கரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, பில்சத் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. விசாரணையில் சம்பவத்தன்று ஜப்பார் வீட்டுக்கு வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் ஜப்பாரின் தம்பி அன்சார், செங்குன்றத்தில் வசித்து வரும் தங்கை மகன் தலிம் அன்சாரி ஆகியோர் வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் முன்விரோதத்தில் பில்சத்தை அவர்கள் இருவரும் கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்