உயர் அதிகாரிகள் மீது புகார் கூறிய கேரள ராணுவ வீரர் மர்மச்சாவு

உயர் அதிகாரிகள் மீது புகார் கூறிய கேரள ராணுவ வீரர் மர்மமான முறையில் இறந்தார்.

Update: 2017-03-03 22:02 GMT
மும்பை,

உயர் அதிகாரிகள் மீது புகார் கூறிய கேரள ராணுவ வீரர் மர்மமான முறையில் இறந்தார்.

உயர் அதிகாரிகள் மீது புகார்

ராணுவ அதிகாரிகள் தங்களின் கீழ் பணிபுரியும் வீரர்களை நடத்தும் விதத்தை செய்தி நிறுவனம் ஒன்று சமீபத்தில் ‘ஸ்டிங் ஆபரேஷன்’ எனப்படும் ரகசிய நடவடிக்கை மூலம் பதிவு செய்தது. அப்போது அதிகாரிகளால் தாங்கள் படும் வேதனைகளை கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ராய் மேத்யூ என்ற வீரர் செய்தியாளரிடம் விளக்கினார்.

ராணுவ அதிகாரிகளின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது, அவர்களது நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது போன்ற பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்படுவதும் அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வீடியோ ஊடகங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

மர்மச்சாவு


இந்த புகார்களை கூறிய ராணுவ வீரர் ராய் மேத்யூ கடந்த 25-ந் தேதி மாயமானார். அவரை சக வீரர்கள் தேடி வந்த நிலையில், நேற்று நாசிக்கின் தியோலாலி கண்டோன்மென்டில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகும் என கருதப்படுகிறது.

கடந்த 25-ந் தேதி கடைசியாக தனது குடும்பத்தினருடன் பேசியிருந்த ராய் மேத்யூ, தனது பேட்டி குறித்த வீடியோ வெளியானதால் பணி பறிபோவதுடன், தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர். அவரது மர்மச்சாவு குறித்து தியோலாலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்