செண்பகராமன்புதூரில் ரே‌ஷன் கடையை முற்றுகையிட்ட தி.மு.க.வினர்

ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூரில் ரே‌ஷன் கடையை முற்றுகையிட்ட தி.மு.க.வினர்

Update: 2017-03-03 22:00 GMT

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூரில் ஒரு ரே‌ஷன்கடை உள்ளது. இங்கு நேற்று காலை தோவாளை ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் தி.மு.க.வினர் பலர் குவிந்தனர். தி.மு.க. ஊராட்சி செயலாளர் கல்யாண சுந்தரம், தோவாளை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவர்கள், ரே‌ஷன் கடைகளில் 20 கிலோ புழுங்கல் அரிசி கொடுப்பதற்கு பதிலாக 7 கிலோ புழுங்கல் அரிசி, 8 கிலோ பச்சை அரிசி, 5 கிலோ கோதுமை என பிரித்து கொடுப்பதாகவும், முதியோருக்கு உதவி பெறுபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரிசியை நிறுத்தியதாகவும் புகார் கூறி முற்றுகையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதைதொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த சொர்ணப்பன், மணி, வேலாயுதபெருமாள், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்