பா.ஜனதாவின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் சித்தராமையா பேட்டி
முதல்–மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் நேற்று பி.யூ.கல்லூரி ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.
பெங்களூரு,
முதல்–மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் நேற்று பி.யூ.கல்லூரி ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு முடிந்த பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பா.ஜனதாவினர் சதி செய்கிறார்கள். எந்த ஆதாரங்களும் இல்லாமல் அவர்கள் பொய் குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டு சுற்றுகிறார்கள். அதனால் பா.ஜனதாவினரின் இந்த பொய் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். பி.யூ. கல்லூரி ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
முன்னதாக பி.யூ. கல்லூரி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சித்தராமையா பேசியதாவது:–
7–வது ஊதிய குழு அமைக்கப்படுகிறது. அந்த குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆசிரியர்கள் உள்பட அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படும். அரசு அமைக்கும் ஊதிய குழு விவாதிக்கும் அம்சங்களில் ஆசிரியர்களின் கோரிக்கையும் சேர்க்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பி.யூ. கல்லூரி பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த பிறகு ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் மீண்டும் நான் விவாதிப்பேன்.
அதனால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து அரசுக்கு அழுத்தம் கொடுக்க போராட்டம் நடத்துவது சரியல்ல. இதில் நீங்கள் ஈடுபடக்கூடாது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீங்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.