தொழிலாளியை பணி நிரந்தரம் செய்ய லஞ்சம்: துப்புரவு ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு

குமாரபாளையம் நகராட்சி தொழிலாளியை பணி நிரந்தரம் செய்வதற்காக லஞ்சம் வாங்கிய துப்புரவு ஆய்வாளருக்கு நாமக்கல் கோர்ட்டில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Update: 2017-03-03 22:45 GMT

நாமக்கல்,

லஞ்சம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தவர் மாது. இவர் கடந்த 1999–ம் ஆண்டு தனது பணியை நிரந்தரம் செய்து கொள்ளவும், நகராட்சியில் இருந்து பெறவேண்டிய நிலுவை சம்பளத்தை பெறவும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் முருகனிடம் அணுகினார்.

அதைக்கேட்ட முருகன் பணி நிரந்தரம் செய்ய, நிலுவை தொகை பெற ரூ.2 ஆயிரம் லஞ்சமாக கேட்டார். இதைகேட்ட மாது தருவதாக ஒப்புக்கொண்டு இந்த விவரம் குறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவித்தார்.

2 ஆண்டு சிறை தண்டனை

அதையடுத்து லஞ்சம் ஒழிப்பு போலீசார் தெரிவித்ததின்பேரில் ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை முருகனிடம் கொடுத்தார். அந்த தொகையை பெறும்போது, முருகன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்டார். அதைதொடர்ந்து முருகன் மீது நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

அந்த விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வெளியானது. அதில் நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி கருணாநிதி, முருகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்