2 மெட்ரோ ரெயில் வழித்தடங்களுக்கான திட்ட அறிக்கை மாநில அரசின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பு

2 மெட்ரோ ரெயில் வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசின் ஒப்புதலுக்காக மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் சமர்ப்பித்து உள்ளது.

Update: 2017-03-02 22:37 GMT

மும்பை,

2 மெட்ரோ ரெயில் வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசின் ஒப்புதலுக்காக மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் சமர்ப்பித்து உள்ளது.

மெட்ரோ ரெயில் வழித்தடங்கள்

மும்பை பெருநகர வளர்ச்சிக்குழும எல்கைக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து தேவை மற்றும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) மோனோ மற்றும் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தானே– பிவண்டி– கல்யாண் இடையே 24 கி.மீ. தூரத்திற்கு ரூ.8 ஆயிரத்து 416 கோடியில் 5–வது மெட்ரோ ரெயில் வழித்தட திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் கல்யாண் ஏ.பி.எம்.சி., கல்யாண் ரெயில் நிலையம், சகாஜனந்த் சவுக், துர்காடி போர்ட், கோன்காவ், கோவேகாவ் எம்.ஐ.டி.சி., ராஜ்நவுலி வில்லேஜ், டெம்கார், கோபால் நகர், பிவண்டி, தமன்கர் நாக்கா, அஞ்சூர் பாடா, புர்னா, கால்கர், காசேலி, பால்கும்நாக்கா, காபூர்பாவடி ஆகிய 17 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைகின்றன.

விரிவான திட்ட அறிக்கை

மும்பை லோகண்ட்வாலா– ஜோகேஸ்வரி– காஞ்சூர்மார்க் இடையே 14.5 கி.மீ. தூரத்திற்கு ரூ.6 ஆயிரத்து 672 கோடி செலவில் 6–வது மெட்ரோ ரெயில் வழித்தட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ், ஆதர்ஸ் நகர், மோமின் நகர், ஜே.வி.எல்.ஆர்., ஷியாம் நகர், மகாகாளி கேவ்ஸ், சீப்ஸ் வில்லேஜ், சாகிவிகார் ரோடு, ராம்பாக், பவாய் ஏரி, பவாய் ஐ.ஐ.டி., காஞ்சூர்மார்க் மேற்கு, விக்ரோலி கிழக்கு விரைவு சாலை ஆகிய 13 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன.

இந்த இரு வழித்தட திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தற்போது மாநில அரசிடம் ஒப்புலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து மும்பை பெருநகர வளர்ச்குழும கமி‌ஷனர் யு.பி.எஸ். மதான் கூறுகையில், ‘5 மற்றும் 6–வது மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு மாநில அரசிடம் இருந்து இந்த மாதத்தில் ஒப்புதல் கிடைத்து விடும் என எதிர்பார்க்கிறோம். அதன்பின்னர் உடனடியாக இத்திட்டங்களுக்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்