ஏழைகள் பயன்படுத்தும் வகையில் சென்னையில் தயாரான அந்தியோதயா ரெயில் மும்பை வந்தது
சென்னையில் தயாரிக்கப்பட்ட அந்தியோதயா ரெயில் மும்பை வந்தது. முன்பதிவு இல்லாத இந்த ரெயில் குர்லா டெர்மினஸ்– டாடாநகர் இடையே இயக்கப்பட உள்ளது.
மும்பை,
சென்னையில் தயாரிக்கப்பட்ட அந்தியோதயா ரெயில் மும்பை வந்தது. முன்பதிவு இல்லாத இந்த ரெயில் குர்லா டெர்மினஸ்– டாடாநகர் இடையே இயக்கப்பட உள்ளது.
அந்தியோதயா ரெயில்நாட்டில் பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள வழித்தடங்களில் ஏழை, எளியவர்களின் வசதிக்காக முன்பதிவு இல்லாத தொலைதூர அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி மும்பை குர்லா டெர்மினஸ்– ஜார்கண்ட் மாநிலம் டாடாநகர் இடையே அந்தியோதயா ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த ரெயில்கள் வாரத்திற்கு இருமுறை இயக்கப்பட இருக்கிறது.
அந்தியோதயா ரெயில் பெட்டிகள் சென்னை ஒருங்கிணைந்த ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன.
வசதிகள்பணிகள் முடிந்து அந்தியோதயா ரெயில் மும்பை வந்து சேர்ந்து உள்ளது. 22 பெட்டிகள் கொண்ட அந்த ரெயில் மும்பை குர்லா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ரெயில் பெட்டிகளின் இருபுறமும் மத்தியில் மஞ்சள் நிறத்திலும், மேல் மற்றும் கீழ்பகுதிகளில் சிவப்பு நிறுத்திலும் வண்ணங்கள் தீட்டப்பட்டு உள்ளன.
இதன் மூலம் அந்தியோதயா ரெயில் பெட்டிகள் மற்ற ரெயில் பெட்டிகளில் இருந்து மாறுபட்டு காட்சி அளிக்கிறது.
பெட்டிகளுக்குள் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, வாசல் அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தீயணைப்பு உபகரண வசதிகள் வைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர நவீன கழிப்பறை வசதியும் உள்ளது.